‘செலக்டிவ்’ மதச்சார்பின்மை வியாதி காரணமாகவே, ராஜஸ்தானில் அப்பாவி தையல் கடைக்காரர் கொலை செய்யப்பட்டதை கண்டும் காணாமல், காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., தலைவர்கள் மவுனம் காப்பதாக, பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இதுகுறித்து பா.ஜ., மகளிரணி தேசிய தலைவர் வானதி சீனிவாசன் வெளிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:-
ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில், அப்பாவி தையல் கடைக்காரர் கண்ணையாலாலை மத அடிப்படைவாதிகள், கழுத்தை அறுத்து கொலை செய்துள்ளனர். இதை வீடியோ எடுத்து, சமூக ஊடகங்களில் பதிவிட, ஒட்டுமொத்த நாடும், இந்த கொடூரத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளது. இந்த வீடியோவில், பிரதமர் மோடிக்கும் அவர்கள் கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஜூன் 10-ம் தேதி கண்ணையாலாலை, ராஜஸ்தான் மாநில அரசு கைது செய்தது. தனக்கு ‘ஸ்மார்ட் போன்’ பயன்படுத்த தெரியாது என்று, அவர் போலீசாரிடம் கூறியிருக்கிறார். கடந்த 15-ம் தேதி, ஜாமினில் வெளிவந்த அவர், தனக்கு கொலை மிரட்டல் வருவது குறித்து, காவல் நிலையத்தில் புகார் அளித்தும், ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் அரசு, எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. அப்பாவியான தையல் கடைக்காரரை கைது செய்து, அவரை மத வெறியர்களுக்கு ராஜஸ்தான் காங்கிரஸ் அரசு அடையாளம் காட்டியதே, இந்த கொடூரத்திற்கு காரணம்.
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில், நுாபுர் சர்மா பேசியதற்காக, இந்திய நாடே மன்னிப்பு கேட்க வேண்டும் என, காங்கிரஸ், கம்யூனிஸ்ட், தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள் கொந்தளித்து அறிக்கை விட்டன. ஆனால், ராஜஸ்தான் காங்கிரஸ் அரசின் பொறுப்பற்ற செயலால், அப்பாவி ஒருவர் படுகொலை செய்யப்பட்டும், ‘செலக்டிவ்’ மதச்சார்பின்மை வியாதியால் பீடிக்கப்பட்ட தலைவர்கள், எதுவுமே நடக்காதது போல மவுனமாகி விட்டனர். இவ்வாறு வானதி கூறியுள்ளார்.