மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே உட்பட அவருக்கு ஆதரவு அளிக்கும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை, மாநில சட்டப்பேரவைக்குள் நுழைய தடை விதிக்கக் கோரி, உத்தவ் தாக்கரே தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
மகாராஷ்டிர மாநிலத்தின் பரபரப்பான அரசியல் திருப்பங்களுக்கு இடையே, முதலமைச்சர் பதவியை, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே அண்மையில் ராஜினாமா செய்தார். அவரது கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்க்கொடி தூக்கியதால், உத்தவ் தாக்கரே முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டிய நிலைமைக்கு தள்ளப்பட்டார். இதைத் தொடர்ந்து, எதிர்க்கட்சியான பாஜக உடன் சேர்ந்து, ஆட்சி அமைக்க சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்டே முடிவு செய்தார். இதன்படி, மகாராஷ்டிர மாநிலத்தின் 20வது முதலமைச்சராக, ஏக்நாத் ஷிண்டே பதவி ஏற்றார். அவருக்கு, ஆளுநர் பகத்சிங் கோஷ்யாரி பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தொடர்ந்து, துணை முதலமைச்சராக, தேவேந்திர பட்னவிஸ் பதவி ஏற்றுக் கொண்டார். இதற்கிடையே, மகாராஷ்டிர மாநிலத்தின் சட்டப்பேரவை சிறப்பு கூட்டத்தொடர் நாளை தொடங்கி இரண்டு நாட்களுக்கு நடைபெற உள்ளது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே மற்றும் அவருக்கு ஆதரவு அளிக்கும் சிவசேனா அதிருப்தி எம்எல்ஏக்களை, மாநில சட்டப்பேரவைக்குள் நுழைய தடை விதிக்கக் கோரி, உத்தவ் தாக்கரே தலைமையிலான மகா விகாஸ் அகாதி கூட்டணி உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்துள்ளனர். அதில், 16 எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க வழக்கு முடியும் வரை அவர்களை சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கக் கூடாது என குறிப்பிடப்பட்டு உள்ளது.