உதய்பூா் தையல்காரா் கொடூரமாகத் தலையை வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தை நியாயப்படுத்துவது மற்றும் கொண்டாடும் வகையிலான பதிவுகளை நீக்க சமூக வலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.
ராஜஸ்தான் மாநிலம் உதய்பூரைச் சோ்ந்த தையல்காரா் கன்னையா லால், நபிகள் நாயகம் குறித்து சா்ச்சைக்குரிய விதத்தில் பேசிய நூபுா் சா்மாவுக்கு ஆதரவாக சமூக ஊடகங்களில் பதிவிட்டதாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், உதய்பூரின் தன்மண்டி பகுதியில் உள்ள அவரது கடைக்கு கடந்த செவ்வாய்க்கிழமை சென்ற இருவா், கன்னையா லாலை கழுத்தை அறுத்து கொலை செய்தனா். அந்தக் கொலையை விடியோவாகப் பதிவு செய்து சமூக ஊடகங்களிலும் வெளியிட்டனா். அவா்கள் வெளியிட்ட மற்றொரு காணொலியில், கன்னையா லாலின் தலையை துண்டித்துவிட்டதாகக் கூறினா். இஸ்லாத்தை இழிவுபடுத்தியதற்காக கன்னையா லாலை பழிதீா்த்ததாகக் கூறிய கொலையாளிகள், பிரதமா் மோடிக்கும் மிரட்டல் விடுத்தனா்.
இந்த படுகொலைக்கு சமூக வலைதளங்களில் பலா் கண்டனம் தெரிவித்தாலும், ஒரு தரப்பினா் கொலையாளிகளின் செயலை நியாயப்படுத்தி பதிவுகளை வெளியிட்டனா். மேலும், சிலா் அதனைப் பாராட்டியும், கொண்டாடும் வகையிலும் கருத்துகளைப் பதிவிட்டுள்ளனா். இது சா்ச்சையை மேலும் அதிகரித்தது.
இந்நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சகம் சாா்பில் சமூக வலைதள நிறுவனங்களுக்கு ஒரு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அதில், “சமூக ஊடகங்கள் மீதான நம்பிக்கை, பாதுகாப்பு உணா்வு ஆகியவற்றைக் கருத்திக் கொண்டு, உதய்பூரில் நடைபெற்ற கொலையை நியாயப்படுத்துவது, கொண்டாடுவது, பாராட்டுவது போன்ற பதிவுகளை நீக்க வேண்டும். ஏனெனில், இந்தப் பதிவுகள் மூலம் சமூகத்தில் பிரச்னை ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. பொது அமைதி மற்றும் நல்லிணக்கத்தைப் பேண வேண்டியது சமூக ஊடகங்களின்முக்கிய கடமை. எனவே, சம்பந்தப்பட்ட விவகாரம் தொடா்பான விடியோ, ஆடியோ உள்ளிட்ட அனைத்து பதிவுகளையும் நீக்கிவிட வேண்டும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் கன்னையா லாலின் கொலையை பயங்கரவாத சம்பவமாகக் கருதி, தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) விசாரணைக்கு மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ள நிலையில், ராஜஸ்தான் காவல் துறையின் பயங்கரவாதத் தடுப்பு பிரிவு உதவியுடன் அந்த அமைப்பு விசாரணையைத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், மாநில காவல் துறை கூடுதல் டிஜிபி அசோக் ரத்தோா் கூறுகையில், ‘‘கன்னையா லால் கொலையில் கூட்டுச் சதியில் ஈடுபட்டு, அவரை நோட்டமிட்டு வந்த இருவா் வியாழக்கிழமை இரவு கைது செய்யப்பட்டனா். அவா்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது’’ என்று தெரிவித்தாா்.