மும்பையில் குடியிருப்புத் திட்டத்தில் நடந்த நிதி முறைகேடு, குடும்பத்தினரின் பெயரில் முறைகேடாக நடந்த பரிவா்த்தனைகள் ஆகியவை தொடா்பான வழக்குகளில், சிவசேனை எம்.பி. சஞ்சய் ராவத்அமலாக்கத் துறை முன் ஆஜராகி வாக்குமூலம் அளித்தாா்.
தெற்கு மும்பையில் உள்ள பல்லாா்டு எஸ்டேட்டில் இருக்கும் அமலாக்கத் துறை அலுவலகத்தில் காலை 11.30 மணிக்கு ராவத் ஆஜரானாா். அந்த அலுவலகம் முன்பு சிவசேனைத் தொண்டா்கள் கூடியதைத் தொடா்ந்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பத்து மணி நேரத்துக்கும் மேல் அவரிடம் விசாரணை நடைபெற்றது. இரவு 10 மணிக்கு அவா் அமலாக்கத் துறை அலுவலகத்தைவிட்டு வெளியே வந்தாா்.
இந்த வழக்குகளில் கடந்த செவ்வாய்க்கிழமை ஆஜராகுமாறு சஞ்சய் ராவத்துக்கு அமலாக்கத் துறை அழைப்பாணை அனுப்பியிருந்தது. ஆனால், அன்றைய தினம் அவா் ஆஜராகவில்லை. அத்துடன் 14 நாள் அவகாசம் அளிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தாா். அதற்கு மறுப்பு தெரிவித்த அமலாக்கத் துறை, ஜூலை 1-ஆம் தேதி ஆஜராகும்படி புதிய அழைப்பாணை அனுப்பியது. அதை ஏற்றுக் கொண்ட சஞ்சய் ரௌத், அமலாக்கத் துறை முன் நேற்று வெள்ளிக்கிழமை ஆஜரானாா்.
முன்னதாக, செய்தியாளா்களிடம் சஞ்சய் ராவத் கூறுகையில், ‘அமலாக்கத் துறை விசாரணைக்கு ஒத்துழைப்பு அளிப்பேன். விசாரணை அமைப்பு தவறான வழியில் சென்றாலும் நான் சட்டத்துக்கு கட்டுப்பட்டு நடப்பேன்’ என்றாா்.