மின் இணைப்பை துண்டிக்கப் போகிறோம் எனக் கூறி மோசடி!

மின் இணைப்பை துண்டிக்கப் போகிறோம் எனக் கூறி சைபர் கிரைம் குற்றவாளிகள், நுாதன முறையில் பண மோசடியில் ஈடுபட்டு வருவதாக, போலீஸ் கமிஷனர் எச்சரித்துள்ளனர்.

இதுகுறித்து சென்னை போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால் கூறியுள்ளதாவது:-

சைபர் கிரைம் குற்றவாளிகள், மோசடிக்கு பல விதமான யுத்திகளை பயன்படுத்தி வருகின்றனர். அந்த வகையில், தற்போது, பொது மக்களின் மொபைல் போன்களுக்கு, ‘உங்கள் வீட்டு மின் இணைப்பு இன்று இரவோடு துண்டிக்கப்படும். நீங்கள் சென்ற மாத மின் கட்டணம் குறித்து ‘அப்டேட்’ செய்யவில்லை. உடனடியாக மின்வாரிய அதிகாரிகளை தொடர்பு கொள்ளவும்’ என, மொபைல் போன் எண்களை அனுப்புகின்றனர். இதை உண்மை என நம்பி தொடர்பு கொள்வோரின் வங்கி கணக்கு விபரங்களை பெற்று, நுாதன முறையில் மோசடி செய்து வருகின்றனர். பொது மக்கள் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என்று வரும் தகவல்களை நம்ப வேண்டாம். மின்வாரியம் ஒரு போதும், இதுபோன்ற தகவல்களை மொபைல் போன்களுக்கு அனுப்புவது இல்லை. உங்கள் மொபைல் போன் எண்களுக்கும் தொடர்பு கொள்ள மாட்டார்கள்.

அதேபோல, அரசு உயர் அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் படங்களை, ‘வாட்ஸ் ஆப்’பில், முகப்பு படமாக, சைபர் கிரைம் குற்றவாளிகள் வைக்கின்றனர். இதன் வாயிலாக அவர்களின் நண்பர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் மொபைல் போன் எண்களுக்கு, ‘அமேசான் கிப்ட் கார்டு வாங்கி அனுப்புங்கள். மிகவும் அவசரம் பணம் அனுப்புங்கள்’ என, தகவல் அனுப்புகின்றனர். இதுபோன்று தெரியாத எண்களில் இருந்து, தங்களுக்கு தெரிந்த அரசு அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களின் படம் வைக்கப்பட்ட எண்ணில் இருந்து வரும் தகவல்களை புறக்கணிக்க வேண்டும். இதுபோன்ற தகவல்கள், சமூக வலைதளம் மற்றும் மின்னஞ்சல் என அதில் வந்தாலும், பணம் அனுப்ப வேண்டாம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.