கந்துவட்டி புகாரில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை: டி.ஜி.பி.

கந்துவட்டி புகாரில் கைதானவர்களின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று போலீஸ் டி.ஜி.பி. சைலேந்திரபாபு கூறினார்.

நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களின் உயர் போலீஸ் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. இதில் தமிழக போலீஸ் டி.ஜி. பி.சைலேந்திரபாபு கலந்து கொண்டு, சட்டம்- ஒழுங்கு பிரச்சினையை எப்படி சமாளிக்க வேண்டும் என்பது குறித்து ஆலோசனைகள் வழங்கி பேசினார். மாவட்ட வாரியாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும், கந்துவட்டி, கஞ்சா விற்பனை போன்றவற்றை கட்டுப்படுத்த எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள், இதுதொடர்பாக பதியப்பட்ட வழக்குகள் குறித்தும் கேட்டறிந்தார். தொடர்ந்து நெல்லை போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட போலீஸ் நிலையங்களில் சிறப்பாக பணி செய்த போலீசாருக்கு ஊக்கத்தொகை மற்றும் பாராட்டு சான்றிதழை வழங்கினார்.

பின்னர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு நிருபர்களிடம் கூறியதாவது:-

கந்துவட்டி தொடர்பாக தமிழகம் முழுவதும் 238 புகார்கள் பெறப்பட்டு, 171 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. இதில் 76 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர். கந்துவட்டி புகார்களில் கைது செய்யப்படுவோரின் சொத்துக்களை முடக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. தென் மண்டல அளவில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில் ஈடுபடுவோரின் சொத்து முடக்கப்படுவது போல் இதனை பின்பற்றி தமிழகம் முழுவதும் இதே நடவடிக்கைகள் எடுக்க முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

தமிழகத்தில் கஞ்சா பயிரிடுவது முழுவதும் தடுக்கப்பட்டு உள்ளது. ஆந்திரா, ஒடிசா போன்ற மாநிலங்களில் இருந்து ரெயில் மூலம் கஞ்சா கடத்தப்படுவதாக வரும் தகவலை தொடர்ந்து ரெயில்வே போலீஸ் மூலம் கஞ்சாவை மட்டும் கண்டுபிடிக்கும் வகையில் மோப்ப நாய்களுக்கு சென்னை, கோவை, சேலம் ஆகிய இடங்களில் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நெல்லை மாநகர பகுதியில் கொலை, கொலை முயற்சி, கஞ்சா விற்பனை உள்ளிட்ட வழக்குகளில் சம்பந்தப்பட்ட 60 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். 1,000 கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கஞ்சா விற்பனை செய்த 87 பேர் கைது செய்யப்பட்டு, 61 கிலோ பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குட்கா விற்பனை செய்ததாக 183 பேர் கைது செய்யப்பட்டு, 767 கிலோ பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 6 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டது. கந்து வட்டி வழக்கில் 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

கூட்டத்தில் நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அவினாஷ்குமார், தென்மண்டல ஐ.ஜி. அஸ்ரா கார்க், நெல்லை சரக டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் சரவணன் (நெல்லை), பாலாஜி சரவணன் (தூத்துக்குடி), ஹரிகிரன் பிரசாத் (கன்னியாகுமரி), கிருஷ்ணராஜ் (தென்காசி), நெல்லை மாநகர துணை போலீஸ் கமிஷனர்கள் சீனிவாசன், சரவணகுமார் அனிதா உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பின்னர் போலீஸ் ஸ்டேஷன்களில் ஏற்படும் விசாரணை மரணங்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வு கருத்தரங்கம், மதுரையில் நேற்று நடந்தது. அதில் டி.ஜி.பி., சைலேந்திரபாபு பேசியதாவது:-

சிலர் தற்கொலை எண்ணத்தில் இருப்பர். அவர்களின் மனநிலையை மாற்ற முயற்சித்தாலும், சில சமயங்களில் தற்கொலை நிகழ்ந்துவிடுகிறது. இது அறிவியல் பூர்வமாக நிரூபிக்கப்பட்டுள்ளது. தமிழக போலீஸ் துறை பாரம்பரியமிக்கது. நாம் சட்டத்தின் பார்வையில் பணியாற்றுகிறோம் என்பதால், அதற்கேற்ப செயல்பட வேண்டும். குற்றவாளியை உறுதி செய்ய கண்காணிப்பு கேமரா, மொபைல் போன் டவர், கைரேகை போன்ற வசதிகள் உள்ளன. சட்டம் ஒழுங்கை பாதுகாக்க துப்பாக்கியால் சுடும் அதிகாரம் நமக்கும் உள்ளது. அதற்காக நமக்கான பொறுப்பில் இருந்து விலகி விடக்கூடாது.

போலீஸ், நீதித்துறை ஆதாரங்களின் அடிப்படையிலேயே செயல்படுகின்றன. அதன் அடிப்படையிலேயே நாம் விசாரணை நடத்த வேண்டும். போலீசாருக்கு அதிகாரிகள் அழுத்தம் கொடுப்பதை தவிருங்கள். நாம் குற்றவாளிகளிடம் விசாரிக்க என்னென்ன உரிமைகள் உள்ளதோ, அதேபோல் அவர்களுக்கும் சில உரிமைகள் உள்ளன. கடந்த, 10 ஆண்டுகளில், 80 விசாரணை மரணங்கள் நடந்துள்ளன. அனைத்தும் சி.பி.சி.ஐ.டி., விசாரித்தது. இதில், 12 வழக்குகள் உண்மையானவை என்பதால், 48 போலீசார் மீது குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மற்றவை உடல்நல பாதிப்பு, தற்கொலை போன்ற வழி மரணங்கள். இவ்வாறு அவர் பேசினார்.

பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், கஞ்சா விற்பனை தொடர்பாக, 18 ஆயிரம் பேர் கைது செய்யப்பட்டு, 2,200 வங்கி கணக்குகள் முடக்கப்பட்டன. இதுவரை, 200 பேரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. ரயிலில் கஞ்சா கடத்தி வருவதை தடுக்க சென்னைக்கு இரு மோப்ப நாய்கள், கோவை, சேலத்திற்கு தலா ஒரு மோப்ப நாய் பயன்படுத்தப்பட உள்ளது. கடன் வழங்கும் மொபைல் போன் செயலியை யாரும் பயன்படுத்த வேண்டாம். கந்துவட்டி புகார்களில் தொடர்ந்து பலர் கைது செய்யப்பட்டு வருகின்றனர் என்றார்.