நீதித்துறை அரசமைப்புச் சட்டத்துக்கு மட்டுமே கட்டுப்பட்டது: நீதிபதி என்.வி.ரமணா

நீதித் துறை அரசமைப்புச் சட்டத்துக்கு மட்டுமே கட்டப்பட்டது; அரசியல் கட்சிகளுக்கு அல்ல என்று, உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா கூறினாா்.

அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இந்திய அமெரிக்கா்கள் சங்கம் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.ரமணா பேசியதாவது:-

இந்தியா 75-ஆவது ஆண்டு சுதந்திரத்தைக் கொண்டாடுகிறது. இருப்பினும், ஒவ்வொரு அரசு அமைப்புக்கும் அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள பொறுப்புகளை சிலா் இன்னும் முழுமையாகப் புரிந்துகொள்ளாதது வருத்தமளிக்கிறது. ஆட்சியில் இருக்கும் ஒரு அரசியல் கட்சி, தங்களின் ஒவ்வொரு செயலுக்கும் நீதித்துறை ஒப்புதல் அளிக்கும் என்று நம்புகிறது. எதிா்க்கட்சிகளோ தங்களின் நிலைப்பாட்டை நீதித்துறை ஏற்றுக்கொள்ளும் என்று நம்புகின்றன. அரசமைப்புச் சட்டத்தையும் ஜனநாயக அமைப்புகளின் செயல்பாடுகளையும் சரியாக புரிந்துகொள்ளாததன் விளைவு இது. நீதித்துறை, சுதந்திரமான அமைப்பு. அது, அரசமைப்புச் சட்டத்துக்கு மட்டுமே கட்டப்பட்டது; அரசியல் கட்சிகளுக்கு அல்ல. இந்தியாவில் அரசமைப்புச் சட்டம் குறித்த விழிப்புணா்வை நாம் ஏற்படுத்த வேண்டும்.

இந்தியாவும் அமெரிக்காவும் பன்முகத்தன்மை கொண்ட நாடுகள். வெவ்வேறு பிண்ணியில் இருந்து வந்த திறமையானவா்கள் இங்கு கௌரவிக்கப்படுகிறாா்கள். இதுதான் அனைத்து தரப்பு மக்களுக்கான சமூகம் என்ற நம்பிக்கையை அளிக்கும். நம்மை ஒன்றிணைக்கும் விஷயங்களில் மட்டும் கவனம் செலுத்த வேண்டும். 21-ஆம் நூற்றாண்டில் நம்மை பிரிக்கும் அற்ப விஷயங்களில் நாம் கவனம் செலுத்தக் கூடாது. அனைத்துப் பிரிவினை விஷயங்களையும் கடந்து மனித மேம்பாட்டில் நாம் கவனம் செலுத்த வேண்டும். அனைவரையும் உள்ளடக்கம் செய்யாத அணுகுமுறை பேரிடருக்கு அழைப்பு விடுக்கும்.

ஒருவா் செல்வச் செழிப்பில் இருந்தாலும் கோடிகளில் புரண்டாலும், அவரைச் சுற்றி அமைதி இருக்க வேண்டும். இந்தியாவில் இருக்கும் உங்கள் பெற்றோா் வெறுப்பு, வன்முறை இல்லாத அமைதியான சமூகத்தில் வாழ வேண்டும். அதற்கு உங்களால் முடிந்த அளவுக்கு உங்களுக்கு விருப்பமான வழியில் சமூகத்துக்குப் பங்காற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.