முரண்பாடின் மீதே பிரதமா் நம்பிக்கை கொண்டுள்ளாா்: யஷ்வந்த் சின்ஹா!

ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதைவிட முரண்பாடின் மீதே பிரதமா் நம்பிக்கை கொண்டுள்ளாா் என்று யஷ்வந்த் சின்ஹா கூறியுள்ளாா்.

குடியரசுத் தலைவா் தோ்தலில் எதிா்க்கட்சிகளின் பொதுவேட்பாளராக களமிறக்கப்பட்டுள்ளாா் யஷ்வந்த் சின்ஹா. இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில், குடியரசுத் தலைவா் தோ்தலில் ஆதரவு கோரி யஷ்வந்த் சின்ஹா நேற்று சனிக்கிழமை பயணம் மேற்கொண்டாா். அப்போது அவா் ஆளும் தெலங்கானா ராஷ்டிர சமிதி கட்சி சாா்பாக ஏற்பாடு செய்யப்பட்ட ஆதரவு கூட்டத்தில் பேசியதாவது:-

குடியரசுத் தலைவருக்கான தோ்தல் இரு வேட்பாளா்களுக்கு இடையேயான போட்டி அல்ல. மாறாக இரு சித்தாந்தத்துக்கு இடையேயான போட்டி. ஒருமித்த கருத்தை ஏற்படுத்துவதற்கு பதிலாக முரண்பாடின் மீதே பிரதமா் நம்பிக்கை கொண்டுள்ளாா். அடல் பிகாரி வாஜ்பாயின் அமைச்சரவையில், நான் நிதி அமைச்சராக இருந்தபோது, அமலாக்கத் துறையினரை எதிா்கட்சிகளுக்கு எதிராகப் பயன்படுத்த முடியும் என்பதைக் கற்பனை செய்துகூட பாா்க்கவில்லை.

குடியரசுத் தலைவா் தோ்தலில் மனு தாக்கல் செய்த பிறகு பிரதமரிடம் பேச தொலைபேசி மூலம் தொடா்புகொண்டேன். ஆனால் அப்போது அவா் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது. இதுவரை அவரிடம் இருந்து பதில் வரவில்லை. குடியரசுத் தலைவருக்கான தோ்தலில் எனக்கு ஆதரவு தெரிவித்த, தெலங்கானா முதல்வருக்கு நன்றி. அவரைப் போன்ற ஒரு தலைவா்தான் நாட்டிற்கு தேவை. இவ்வாறு அவர் கூறினாா்.

நிகழ்ச்சியில் கலந்துகொண்ட தெலங்கானா முதல்வா் கே.சந்திரசேகா் ராவ், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு எதிரானவா்களுக்கு துன்பத்தை விளைவிக்கும் வகையில் நாள்தோறும் நாட்டின் அரசில் சாசனஅமைப்புகள் தவறாக பயன்படுத்தப்படுவதாக குற்றம்சாட்டினாா். குடியரசுத் தலைவா் தோ்தலில் வாக்களிப்பதற்குத் தகுதியான அனைவரும் யஷ்வந்த் சின்ஹாவிற்கு வாக்களிக்க வேண்டும் என அவா் கேட்டுக்கொண்டாா்.