மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூருக்கு நேற்று சென்று கொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் நடுவானில் புகை ஏற்பட்டதால் டெல்லியில் தரையிறக்கப்பட்டது.
“டெல்லியில் இருந்து ஜபல்பூருக்கு 5,000 அடி உயரத்தில் விமானம் சென்று கொண்டிருந்தபோது புகை ஏற்பட்டதை விமானப் பணியாளா்கள் கண்டறிந்து தகவல் அளித்தனா். இதையடுத்து, விமானம் அவசரமாக டெல்லிக்கு மீண்டும் திரும்பி பத்திரமாக தரையிறக்கப்பட்டது. பயணிகள் அனைவரும் பத்திரமாக உள்ளனா். அவா்கள் உடனடியாக மாற்று விமானத்தில் ஜபல்பூருக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்” என்று ஸ்பைஸ் ஜெட் நிறுவன செய்தித் தொடா்பாளா் தெரிவித்தாா்.
விமான என்ஜினில் ஏற்பட்ட ஆயில் கசிவே புகை ஏற்பட்டதற்கு காரணம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து இயக்ககத்தின் அதிகாரிகள் தெரிவித்தனா். கடந்த இரண்டு வாரத்தில் ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஏற்படும் 5-ஆவது கோளாறு சம்பவம் இதுவாகும். இந்த ஐந்து சம்பவங்கள் குறித்தும் சிவில் விமானப் போக்குவரத்து இயக்கம் விசாரணை நடத்தி வருகிறது.