எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியை சந்தித்து வரும் இலங்கையில் உணவு பொருட்கள், எரிப்பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு நிலவி வருகிறது. மருத்துவம், பாதுகாப்பு போன்ற அவசர தேவைகளுக்கு மட்டும் முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருவதால், 90 சதவீத தனியார் பேருந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் உள்ளூர் பஸ் சேவை மற்றும் ரயில் சேவையையே பயன்படுத்தி கொள்ள வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் விமான எரிபொருளுக்கும் பற்றாகுறை ஏற்பட்டுள்ளதால், உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமான சேவைகளும் பாதிக்கப்பட்டு, நாட்டின் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
“ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் உள்ளிட்ட நாட்டின் முக்கிய விமான சேவை நிறுவனங்களில் எரிபொருள் கையிருப்பும் வேகமாக குறைந்துள்ளது. விமான சேவைக்கு எரி பொருள் பெறுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும். அதுவரை விமான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் அனைத்து விமான நிலையங்களும் மூடப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது” என்று விமான நிலைய அதிகாரிகள் அச்சம் தெரிவி்த்துள்ளனர்.