கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் மற்றொருவருக்கு ஆயுள் தண்டனை!

குஜராத்தின் கோத்ராவில், 2002ல் நடந்த ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள மற்றொரு குற்றவாளிக்கும், ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

குஜராத்தில் முதல்வர் பூபேந்திர படேல் தலைமையிலான பா.ஜ., அரசு அமைந்துள்ளது. உத்தர
பிரதேசத்தில் உள்ள அயோத்திக்குச் சென்று திரும்பிய கரசேவகர்கள் பயணித்த ரயில் பெட்டிக்கு, குஜராத்தின் கோத்ராவில், 2002 பிப்., 27ல் தீ வைக்கப்பட்டது. இதில், 59 பேர் உயிரிழந்தனர்.அதைத் தொடர்ந்து மாநிலத்தில் பெரும் கலவரம் நிகழ்ந்தது. இதில், 1,200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர்.கோத்ரா ரயில் எரிப்பு சம்பவம் தொடர்பான வழக்கில், சிறப்பு நீதிமன்றம், 2011ல் தீர்ப்பு அளித்தது. இந்த வழக்கில், 31 பேர் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டனர். அதில், 11 பேருக்கு மரண தண்டனையும், 20 பேருக்கு ஆயுள் தண்டனையும் விதிக்கப்பட்டது. குஜராத் உயர் நீதிமன்றம் 2017ல் அளித்த தீர்ப்பில், 11 பேரின் மரண தண்டனை, ஆயுள் தண்டனையாக குறைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து மேலும் மூன்று பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்த வழக்கில் தேடப்பட்டு வந்த குஜராத்தின் கோத்ராவைச் சேர்ந்த ரபிக் பதுக், கடந்தாண்டு பிப்ரவரியில் கைது செய்யப்பட்டார். அவர் மீதான வழக்கு கோத்ரா நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் நேற்று முன்தினம் தீர்ப்பு அளித்தது. இதையடுத்து, கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் இதுவரை, 35 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.