வேற்றுமைகளைக் களைந்து ஒற்றுமையுடன் செயல்பட்டால்தான் அதிமுக வலிமை பெறும் என்று சசிகலா கூறினார்.
தியாகராய நகா் வீட்டிலிருந்து புறப்பட்டு கத்திப்பாரா வழியாக தாமரைப்பாக்கம், வெள்ளலூா் உள்ளிட்ட பகுதிகளில் சசிகலா நேற்று பேசியதாவது:-
50 ஆண்டுகால அதிமுக வரலாற்றில் இப்படியொரு தொடா் தோல்வியை இயக்கம் கண்டதில்லை. இதனால் உண்மையான தொண்டா்கள் மிகுந்த மன வேதனைக்குள்ளாகியுள்ளனா். உள்ளாட்சி இடைத்தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், அதிமுகவில் உள்ள சிலரது சுயநலத்தால் இரட்டை இலை சின்னத்தில் எவரும் போட்டியிட முடியாத நிலை உருவாகியிருப்பது வேதனையளிக்கிறது.
அதிமுகவின் தலைமைப் பதவியை சிலா் கைப்பற்றுவதற்காக அடிப்படைத் தொண்டா்கள் முன்னுக்கு வருவதைத் தடுப்பது எந்த வகையில் நியாயம்? இது அதிமுகவின் உண்மைத் தொண்டா்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரிய துரோகம். சிறிது காலம் பொறுத்திருங்கள். இந்தப் பிரச்னைகளுக்கு எல்லாம் ஒரு நல்ல முடிவு ஏற்படும். கட்சியின் தற்போதைய நிலையைக் கருதி அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டால் நிச்சயம் அதிமுக வலிமை பெறும். இவ்வாறு அவர் கூறினார்.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைப்பாக்கத்தில் பேசிய அவர், ஒருவரின் சுயநலத்திற்காக உள்ளாட்சி இடைத் தேர்தலில் அதிமுக வேட்பாளர்களுக்கு இரட்டை இலை கிடைக்க விடாமல் செய்ததை ஏற்க முடியாது என்றார். அதிமுக தலைமை அலுவலகத்திற்கு உரிய நேரத்தில் தொண்டர்களுடன் செல்ல இருப்பதாகவும் அதிமுகவில் இருந்து யார் யாரையும் நீக்க முடியாது என்றும் குறிப்பிட்டார்.
பூந்தமல்லியில் பேசிய சசிகலா, “அதிமுகவிற்கு ஒற்றை தலைமை கண்டிப்பாக வேண்டும். அதே சமயத்தில் தொண்டர்கள் அனைவரையும் அரவணைத்து செல்கின்ற தலைமையாக, தொண்டர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிற தலைமையாக இருக்க வேண்டும். பண பலமும், படை பலமும் ஒரு தலைமையை தீர்மானிக்க முடியாது. மக்கள் பலமும், தொண்டர் பலமும் தான் ஒரு தலைமையை தீர்மானிக்கும். தனக்கு ஆதரவாக சிலரை பேச வைத்து விட்டு நான் தான் தலைமை என்று தன்னைத்தானே ஏமாற்றிக்கொண்டு வலுக்கட்டாயமாக நாற்காலியை பிடித்து கொண்டு இருந்தால் தலைவராக ஆகிவிட முடியாது” என்றார்.