எங்களை தனித் தமிழ்நாடு கேட்க வைத்து விடாதீர்கள்: ஆ.ராசா

அண்ணா வழியில் பயணிக்கும் எங்களை தனித் தமிழ்நாடு கோரிக்கை எழுப்பி பெரியார் வழியில் செல்ல வைத்துவிடாதீர்கள் என திமுக எம்.பி ஆ.ராசா பேசியது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நாமக்கல் மாவட்டம் பொம்மைக்குட்டைமேட்டில் திமுக நகர்ப்புற உள்ளாட்சி பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழகம் முழுவதும் இருந்து மாநகராட்சி மேயர்கள், துணை மேயர்கள், நகராட்சி மற்றும் பேரூராட்சி தலைவர்கள், துணை தலைவர்கள், வார்டு உறுப்பினர்கள் என 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டுள்ளனர். இந்த மாநாட்டில் நீலகிரி எம்.பியும் திமுக துணை பொதுச் செயலாளருமான ஆ.ராசா, ‘மத்தியில் கூட்டாட்சி-மாநிலத்தில் சுயாட்சி’ என்ற தலைப்பில் உரையாற்றினார். இந்த மாநாட்டில் பேசிய ஆ.ராசா கூறியதாவது:-

இந்தியா ஒரு குடியரசு என்றால் அதில் உள்ள உள்ளாட்சி அமைப்புகள் சின்ன சின்னக் குடியரசுகள். முதலமைச்சருக்கோ, மத்திய அமைச்சருக்கோ இல்லாத கையெழுத்து அதிகாரத்தை உள்ளாட்சி பிரதிநிதிகளுக்கு வழங்கியிருக்கிறது பஞ்சாயத்து ராஜ் சட்டம். அது போல மாநிலங்களுக்கும் அதிகாரம் அளிக்கப்பட வேண்டும் என்பது தான் நம் நோக்கம்.

எவ்வளவோ பேசிவிட்டோம். எவ்வளவோ எழுதிவிட்டோம். ஆனால், இன்றைக்கும் மாநில சுயாட்சி கேட்க வேண்டிய நிலை இருக்கிறது. அதனால் பிரதமர் மோடிக்கும் அமித்ஷாவுக்கும் மெத்த பணிவன்போடு ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். எல்லா மாநிலங்களையும் ஒன்றாகப் பார்க்கிறோம் என்று பிரதமர் மோடி சொல்கிறார். தேசிய ஒருமைப்பாடு ஏற்பட அனைவரும் இந்தியை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று பேசுகிறார் அமித்ஷா. நான் இந்த மேடையில் இருந்து சொல்கிறேன். முதலமைச்சர் இந்த மேடையில் இருக்கிறார், நாங்கள் ஆளுங்கட்சியில் இருக்கிறோம் என்னும் திமிரோடு பேசவில்லை. தனித் தமிழ்நாடு கோரிக்கையை கைவிட்டு, திராவிட முன்னேற்றக் கழகம் மாநில சுயாட்சி முழக்கத்திற்கு வந்துவிட்டது. ஆனால் எங்கள் தத்துவத்தின் பிதாமகனாக இருந்த பெரியார் சாகும் வரை தனி தமிழ்நாடு கேட்டு போராடினார்.

பெரியார் இறப்பதற்கு மூன்று மாதங்களுக்கு முன்பு, அவரது பிறந்த நாளில் விடுதலை நாளிதழில் ஒரு கட்டுரையை எழுதினார். அதில் இந்தியாவில் இருக்கும் வரை இந்து மதம் என்னை சூத்திரனாக வைத்திருக்கும், இந்தியாவில் இருக்கும் வரை தமிழனுக்கு பொருளாதார வளர்ச்சி வராது. வேலைவாய்ப்பில் பங்கு கிடைக்காது. எந்த ஏற்றமும் நிகழாது. எனவே நான் முடிவு செய்து விட்டேன். இன்று கலைஞர் முதலமைச்சராக இருக்கிறார். திமுக தங்களை மாநில சுயாட்சி என்று சுருக்கிக் கொண்டது. ஆனால் நான் சொல்கிறேன். பிரிவினை வேண்டும். தனித் தமிழ் நாடு வேண்டுமென்று இளைஞர்களே முன்வாருங்கள். சுதந்திர தமிழ்நாடு தான் நம்முடைய கடைசி நேர்வு என்று பெரியார் எழுதினார்.

பெரியாரை முழுமையாக ஏற்றுக்கொண்ட நாங்கள், அதிலிருந்து சற்று விலகி, தந்தை பெரியாரையும் ஒதுக்கி வைத்துவிட்டு ஜனநாயகத்திற்காகவும் இந்திய ஒருமைப்பாட்டிற்காகவும் இந்தியா வாழ்க என்று சொன்னோம். சொல்லிக் கொண்டிருக்கிறோம். நான் பிரதமர் மோடிக்கும், அமித்ஷாவுக்கும் சொல்கிறேன். இந்த மேடையில் எங்கள் தலைவரை வைத்துக்கொண்டு சொல்கிறேன். அண்ணா வழியில் பயணிக்கும் எங்களை தனி தமிழ்நாடு கோரிக்கை எழுப்பி பெரியார் வழியில் செல்ல வைத்துவிடாதீர்கள். மாநில சுயாட்சி தாருங்கள். அதுவரை நாங்கள் ஓயமாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.