கட்சி நிர்வாகிகளை விலைக்கு வாங்கிய இபிஎஸ்: டிடிவி

எடப்பாடி பழனிச்சாமி தனக்கான ஆதரவாளர்களை திரட்ட 25 லட்சம் முதல் 5 கோடி ரூபாய் வரை வாரி வழங்கி உள்ளதாக டிடிவி தினகரன் பகிரங்கமாக குற்றம் சுமத்தியுள்ளார்.

சேலம் ஒருங்கிணைந்த மாவட்ட அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் (அமமுக) செயல்வீரர்கள் கூட்டம், வீரபாண்டி அருகே உள்ள நெய்க்காரப்பட்டி உள்ள தனியார் மண்டபத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

எம்ஜிஆர், ஜெயலலிதாவால் உருவாக்கப்பட்ட அதிமுக தற்போது வியாபார நிறுவனமாக மாறி உள்ளது. உண்மை தொண்டர்கள் யாரும் அதிமுகவை விட்டு செல்ல மாட்டார்கள். அவர்கள் அமமுகவில் இணைய வந்தால் மகிழ்ச்சியோடு ஏற்போம்.

தற்போது உள்ள சூழ்நிலையில் அதிமுகவில் தனக்கு ஆதரவாளராக மாறுவதற்கு எடப்பாடி பழனிச்சாமி பெட்டி பெட்டியாக பணத்தை இறக்கியுள்ளார். ஒன்றிய செயலாளர் முதல் மாவட்ட செயலாளர் வரை அனைவருக்கும் பணம் கொடுத்து தான் ஆதரவாளர்களை அவர் திரட்டி உள்ளார். குறைந்தது 25 லட்ச ரூபாய் முதல் அதிகபட்சம் 5 கோடி ரூபாய் வரை அவர் வழங்கி உள்ளார். காலையில் ஓபிஎஸ் உடன் இருப்பவர்கள் மாலையில் இபிஎஸ் உடன் வந்தது எப்படி? 5 மணி நேரத்தில் அனைவருக்கும் ஞானதோயம் பிறந்துவிட்டதா?

அம்மா முன்னேற்ற கழகம் அதிமுகவின் உண்மை தொண்டர்களால் உருவாக்கப்பட்டது. இந்த இயக்கம் மீண்டும் ஒன்றுபட்டு ஆட்சியை கைப்பற்றும். அப்போது அதிமுக எந்த நிலையில் இருந்தாலும் அதனை மீட்டெடுப்போம்.

ஓபிஎஸ் மகன் தமிழக முதலமைச்சரை எதற்காக சந்தித்தார் என்பதை அவர் தெளிவாக விளக்கிவிட்டு சென்றிருக்கலாம். மரியாதை நிமித்தமாக சந்திப்பதாக கூறுவது ஏற்றுக்கொள்ள தக்கதல்ல. கொடநாடு கொள்ளை வழக்கில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என்ற திமுக தேர்தல் அறிக்கை என்ன ஆனது? திமுகவினர் சொல்வது ஒன்று; செய்வது ஒன்றாக உள்ளது. இவ்வாறு டிடிவி தினகரன் தெரிவித்தார்.