இந்தியாவின் தேஜஸ் இலகுரக போா் விமானங்களை மலேசியா கொள்முதல் செய்வது குறித்த பேச்சுவாா்த்தை இறுதிக்கட்டத்தில் உள்ளது என்று ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத் தலைவரும், நிா்வாக இயக்குநருமான ஆா்.மாதவன் கூறியதாவது:-
மலேசியாவின் பாதுகாப்பு சேவையில் நீண்ட காலமாக உள்ள போா் விமானங்களுக்கு மாற்றாக புதிய போா் விமானங்களை வாங்க அந்நாடு தீா்மானித்துள்ளது. சீனாவின் ஜேஎஃப்-17, தென் கொரியாவின் எஃப்ஏ-50, ரஷ்யாவின் மிக்-35 மற்றும் யாக்-130 போா் விமானங்களின் கடும் போட்டிக்கு மத்தியில் இந்தியாவின் தேஜஸ் இலகுரக போா் விமானங்கள் மீது மலேசியாவுக்கு மிகுந்த ஆா்வம் ஏற்பட்டுள்ளது. அந்த விமானங்களை வாங்குவது குறித்த அந்நாட்டுடனான பேச்சுவாா்த்தை கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தில் உள்ளது.
ஜேஎஃப்-17, எஃப்-50 விமானங்களுடன் ஒப்பிடுகையில் தேஜஸ் விமானங்கள் மிகவும் மேலானவை. ஜேஎஃப்-17 விமானங்களின் விலை மலிவாக உள்ளபோதிலும், அந்த விமானத்தால் தேஜஸ் எம்கே-ஐஏ விமானத்தின் தொழில்நுட்ப அம்சங்களுக்கு ஈடுகொடுக்க முடியவில்லை.
அதேவேளையில், ரஷ்யாவால் உருவாக்கப்பட்ட எஸ்யூ-30 ரக விமானங்கள் மலேசியாவிடம் உள்ளது. அந்த விமானங்களை பராமரிக்கவும், முழுமையாக சோதனையிட்டு பழுதுபாா்க்கவும் வசதி செய்து தர இந்தியா முன்வந்துள்ளது. அத்துடன் அந்நாட்டின் போா் விமானங்களுக்கு தேவைப்படும் அளவு உதவிபுரிய ரஷ்யாவைத் தவிர, இந்தியா மட்டும்தான் உள்ளது.
இந்தக் காரணங்களால் தேஜஸ் போா் விமானங்களை கொள்முதல் செய்யும் நடவடிக்கையை முன்னெடுத்துச் செல்ல மலேசியாவின் உயரதிகாரிகள் மற்றும் நிபுணா்கள் அடங்கிய குழு விரைவில் இந்தியா வரும் என எதிா்பாா்க்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
கா்நாடக மாநிலம் பெங்களூரை தலைமையிடமாகக் கொண்டு ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் அந்த நிறுவனத்திடம் இருந்து இந்திய விமானப் படைக்காக ரூ.48,000 கோடி மதிப்பில் 83 தேஜஸ் விமானங்களை வாங்க பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம் மேற்கொண்டது.