எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக இலங்கையில் மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு உள்ளது.
அண்டை நாடான இலங்கை, வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கித் தவித்து வருகிறது. உணவுப் பொருள், மருந்துப் பொருட்கள் தட்டுப்பாடு, எரிபொருட்கள் கிடைக்காத நிலை, போதிய மின்சாரம், மருத்துவ சேவைகள் கிடைக்காமல் என பல வகைகளிலும் அந்நாட்டு மக்கள் கடுமையான இன்னல்களை சந்தித்து வருகின்றனர். இந்த பொருளாதார நெருக்கடி காராணமாக இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்ததும், மகிந்த ராஜபக்சே தலைமையிலான அரசு பதவி விலகி, ரணில் விக்ரமசிங்கே புதிய பிரதமராக பொறுப்பேற்றுக் கொண்டார். ஆனால் அதன்பிறகும் அங்கு பிரச்னைகளும், நெருக்கடிகளும் குறைந்தபாடில்லை.
எரிபொருள் பற்றாக்குறை காரணமாக இலங்கையில் கடந்த சில நாட்களாக பள்ளிகளில் நேரடி வகுப்புகள் ரத்து செய்யப்பட்டு, ஆன்லைன் வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. இந்நிலையில் நேற்று பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என்றும், நேரடி வகுப்புகள் நடத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், கடுமையான எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக, மேலும் ஒரு வாரத்திற்கு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் விடுபட்ட பாடங்களை அடுத்து வரும் விடுமுறை காலத்தில் நடத்த திட்டமிட்டு உள்ளதாகவும் இலங்கை அரசு தெரிவித்துள்ளது. இந்த காலத்தில் ஆன்லைன் வகுப்புகளை எடுக்குமாறு இலங்கை கல்வித் துறை செயலர் நிஹால் ரன்சிங்கே அறிவுறுத்தி உள்ளார். ஆன்லைனில் கல்வி கற்க ஏதுவாக காலை 8 மணி முதல் மதியம் 1 மணி வரை மின்சாரத்தை துண்டிக்கக் கூடாது என்று உத்தரவிடப்பட்டு உள்ளது.