அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை: உச்ச நீதிமன்றம்!

ஜூலை 11ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழுவுக்கு தடை இல்லை என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

அதிமுக பொதுக்குழு மற்றும் செயற்குழு கூட்டம் கடந்த மாதம் 23ஆம் தேதி நடைபெற்றது. முன்னதாக, இதற்கு தடை கோரி ஓபிஎஸ் தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, பொதுக்குழு கூட்டம் நடத்தலாம். ஏற்கனவே ஒப்புதல் அளிக்கப்பட்ட 23 தீர்மானங்கள் மீது மட்டும் ஆலோசித்து முடிவெடுக்கலாம். மற்ற புதிய தீர்மானங்களில் ஆலோசித்தாலும் அதன் மீது எந்த முடிவும் எடுக்க கூடாது என்று உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து இபிஎஸ் உள்பட அவரது ஆதரவாளர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். 378 பக்கங்கள் கொண்ட மனுவை எடப்பாடி தரப்பு தாக்கல் செய்துள்ளது. அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் உயர் நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக யாரேனும் மேல்முறையீடு செய்தால், தங்களது தரப்பு வாதங்களை கேட்காமல் எந்தவித உத்தரவையும் நீதிமன்றம் பிறப்பிக்க வேண்டாம் என ஓபிஎஸ் தரப்பும் கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது.

ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் எடப்பாடி பழனிசாமி கூடுதல் மனுவையும் தாக்கல் செய்துள்ளார். அதில், “அதிமுகவின் செயல்பாடுகளையும், பொதுக்குழுவையும் ஓபிஎஸ் முடக்கப் பார்க்கிறார். ஓபிஎஸ் செயல்பாட்டை நீதிமன்றம் அனுமதிக்க கூடாது.” என கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, தனது மேல்முறையீட்டு மனுவை விரைந்து விசாரிக்க உச்ச நீதிமன்றத்தில் இபிஎஸ் கோரிக்கை விடுத்தார். அதனையேற்று, எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனுவை உச்ச நீதிமன்றம் இன்று விசாரித்தது. நீதிபதிகள் தினேஷ் மகேஸ்வரி, கிருஷ்ண முராரி அடங்கிய அடங்கிய அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடைபெற்றது. அப்போது, “பொதுக்குழு தொடர்பாக எந்த உத்தரவையும் நாங்கள் பிறப்பிக்க போவதில்லை. சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒரு நபர் அமர்வு பொதுக்குழு தொடர்பாக முடிவெடுக்கும். ஜூலை 11ஆம் தேதி அதிமுக பொதுக்குழுவை நடத்த தடையில்லை” என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.