பணப்பரிமாற்ற மோசடி தொடர்பான வழக்கில், சீனாவை தலைமையிடமாக வைத்து இந்தியாவில் செயல்படும், ‘விவோ, ஜியோமி’ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு சொந்தமான, 40 இடங்களில், அமலாக்கத் துறை நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டது.
சீனவைச் சேர்ந்த மொபைல் போன்கள் உள்ளிட்ட மின்னணு பொருட்களை தயாரிக்கும் நிறுவனங்கள், நம் நாட்டில் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்கள் பல வரி ஏய்ப்பு மோசடியில் ஈடுபட்டதாக புகார்கள் எழுந்துள்ளன.இது தொடர்பாக, வருமான வரித் துறை, சி.பி.ஐ., அமலாக்கத் துறை உள்ளிட்ட அமைப்புகள் விசாரணை நடத்தி வருகின்றன.
இந்நிலையில், விவோ உள்ளிட்ட சீன நிறுவனங்களுக்கு சொந்தமாக உத்தர பிரதேசம், மத்திய பிரதேசம், பீஹார் மற்றும் தென் மாநிலங்களில், 40 இடங்களில் உள்ள அலுவலகங்களில், அமலாக்கத் துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். ஜியோமி இந்தியா நிறுவனம், சட்டவிரோதமாக சீனா உள்ளிட்ட நாடுகளுக்கு போலி பெயரில் பணம் அனுப்பியது தொடர்பாக ஏற்கனவே அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது. அந்த வழக்கில், இந்த நிறுவனத்தின், 5,551 கோடி ரூபாய் வங்கி முதலீட்டை அமலாக்கத் துறை முடக்கி வைத்து, கடந்த ஏப்ரலில் நடவடிக்கை எடுத்தது.