நீதிபதிகளின் கருத்துகள் நீதித் துறையின் எல்லையை மீறுவதாக உள்ளது!

நூபுர் சர்மா வழக்கில் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் கருத்துகள் நீதித் துறையின் எல்லையை மீறுவதாக உள்ளதென ஓய்வுபெற்ற நீதிபதிகள் விமர்சித்துள்ளனர்.

முகமது நபிகள் குறித்து நூபுர் சர்மா தெரிவித்த சர்ச்சை கருத்து தொடர்பான வழக்கு விசாரணையின்போது, உச்சநீதிமன்ற நீதிபதிகள் சூர்யகாந்த், பர்திவாலா ஆகியோர், இந்த விஷயத்தில் நூபுர் ஷர்மாவின் கருத்து நாட்டையே தீக்கிரையாக்கிவிட்டதாகவும், இதற்காக அவர் நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கருத்து தெரிவித்திருந்தனர். அவர் பொறுப்பற்ற முறையில் பேசியதால் நாட்டுக்கு மிகப்பெரிய இழப்புகளும் ஏற்பட்டுள்ளதாகவும் நீதிபதிகள் வேதனையுடன் குறிப்பிட்டிருந்தனர்.

உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஒரு வழக்கு விசாரணையின்போது, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பொதுவாக கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி கண்டனம் தெரிவிப்பதில்லை. ஆனால் நூபுர் சர்மா வழக்கு விசாரணையின் நீதிபதிகள் கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி இருப்பதாக பரவலாக விமர்சனங்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில் உச்சநீதிமன்ற நீதிபதிகளின் இக்கருத்து தொடர்பாக 15 முன்னாள் உயர் நீதிமன்ற நீதிபதிகள், 77 முன்னாள் அகில இந்திய ஆட்சிப் பணி அதிகாரிகள், 25 முன்னாள் ராணுவ அதிகாரிகள் ஆகியோர் நேற்று செவ்வாய்க்கிழமை கூட்டாக அறிக்கை ஒன்றை வெளியிட்டனர். அந்த அறிக்கையில் மும்பை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி க்ஷிதிஜ் வியாஸ், கேரள உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி பி.என்.ரவீந்திரன், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரிகளான ஆனந்த் போஸ், ஆர்.எஸ்.கோபாலன், முன்னாள் டிஜிபிக்கள் எஸ்.பி.வைத், பி.எல்.வோரா, முன்னாள் ராணுவ அதிகாரிகளான வி.கே.சதுர்வேதி, எஸ்.பி.சிங் உள்ளிட்ட 117 பேர் கையொப்பமிட்டுள்ளனர். அந்த அறிக்கையில் அவர்கள் கூறியிருப்பதாவது:-

நூபுர் சர்மாவுக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் தெரிவித்துள்ள துரதிருஷ்டவசமான கருத்துகள் நீதிமன்ற சிந்தனைக்கும் அணுகுமுறைக்கும் உகந்ததாக இல்லை. இக்கருத்துகள் உள்நாட்டிலும் நாட்டுக்கு வெளியிலும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளன. இந்தக் கருத்துகள் மிகப் பெரிய ஜனநாயக நாடான இந்தியாவின் நீதி பரிபாலன அமைப்பில் அகற்ற முடியாத வடுவை ஏற்படுத்தி விட்டன. நீதிமன்ற உத்தரவில் இடம்பெறாத இந்தக் கருத்துகளை நீதிமன்ற உரிமை என்ற பெயரில் நியாயப்படுத்த முடியாது.
பொறுப்புள்ள குடிமக்கள் என்ற வகையில், அனைத்து அமைப்புகளும் அரசியல் சாசனப்படி தங்கள் கடமையை ஆற்றும்போதுதான் எந்த நாட்டின் ஜனநாயகமும் தழைத்திருக்கும் என்ற நாங்கள் நம்புகிறோம்.

உச்ச நநீதிமன்றத்தின் இரு நீதிபதிகளும் அண்மையில் தெரிவித்துள்ள கருத்துகள் லட்சுமண ரேகையைத் தாண்டி விட்டன. அதற்கு எதிராக அறிக்கை வெளியிடுமாறு அவை எங்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்தி விட்டன. நீதிபதிகள் தங்கள் கருத்தைத் திரும்பப் பெற வேண்டும். உச்சநீதிமன்றத்திடம் நூபுர் சர்மா நீதியைக் கோரியிருந்தார். அவரது மனுவில் எழுப்பப்பட்டிருந்த விஷயத்துக்கும் நீதிமன்றம் வெளியிட்ட கருத்துகளுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. அக்கருத்துகள் நீதிபரிபாலன அமைப்பின் அனைத்து அம்சங்களையும் மீறுவதாக அமைந்துள்ளன.

நூபுர் சர்மாவுக்கு நீதிமன்றத்தில் நீதி கிடைக்கச் செய்வது மறுக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் வெளியிட்ட கருத்துகள், உதய்ப்பூரில் ஒருவர் தலையை துண்டித்துக் கொல்லப்பட்டதை நியாயப்படுத்தும் வகையில் உள்ளன. ஒரு முதல் தகவல் அறிக்கை என்பது கைதுக்கு வழிவகுக்க வேண்டும் என்ற கருத்தைக் கேட்டு சட்ட நிபுணர்கள் அதிர்ச்சி அடைந்தனர். மற்ற அமைப்புகள் தொடர்பாக நீதிமன்றம் தெரிவித்த கருத்துகளும் கவலை அளிப்பதாக உள்ளன. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.