இலங்கையில் மீண்டும் மக்கள் போராட்டம் வெடித்துள்ளதால் அங்கு பிரதமர் அலுவலகம் தற்காலிமாக மூடப்பட்டுள்ளது.
கிட்டதட்ட கடந்த ஐந்து மாதங்களாக இலங்கை வரலாறு காணாத பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதன் விளைவாக உணவுப் பொருட்கள், மருந்து, மாத்திரைகள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை அங்கு விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்துள்ளது. அத்துடன் பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரிபொருட்களை வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய முடியாமல் இலங்கை அரசு தவித்து வருகிறது. இந்த இக்கட்டான சூழலில் இருந்து மீள, பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தலைமையிலான அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் பொருளாதார சிக்கல் கொஞ்சம் கூட தீர்ந்ததாக தெரியவில்லை.
இதன் விளைவாக, புதிய அரசு பொறுப்பேற்ற பின் சில மாதங்கள் பொறுமை காத்து வந்த இலங்கை மக்கள், பிரதமர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராக போராட்டத்தில் இறங்கி உள்ளனர். நாட்டின் பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியாவிட்டால் பதவியை விட்டு விலகுமாறு ரணில் விக்மரசிங்கே வீட்டு முன்பு மக்கள் போராட்டம் நடத்த துவங்கி உள்ளனர். இதனையடுத்து அங்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு, இலங்கை பிரதமர் அலுவலகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.
முன்னதாக, பொருளாதார நெருக்கடியின் எதிரொலியாக வெடித்த மக்கள் போராட்டத்தின் விளைவாக, பிரதமராக பதவி வகித்து வந்த மகிந்த ராஜபக்சே கடந்த மே மாதம் பதவி விலகினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இலங்கை எம்பிக்கள் நாடாளுமன்றத்தில் ‘கோ ஹோம் கோத்த’ என்று கோஷம் எழுப்பியதால் அவைக்கு வந்த அதிபர் கோத்தபய ராஜபக்சே, திடீரென அவையை விட்டு வெளியேறினார்.
இலங்கையின் நாடாளுமன்ற கூட்டத்தின் இரண்டாவது நாள் கூட்டம் நேற்று நடந்தது. அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடாளுமன்றத்திற்கு வருகை தந்தார். அப்போது எதிர்க்கட்சி உறுப்பினர்கள் அதிபருக்கு எதிராக கோஷங்களையும், பதாகைகளை ஏந்தியும் போராட்டம் நடத்தினர். அப்போது ‘கோ ஹோம் கோத்தபய’ என்ற கோஷத்துடன் உறுப்பினர்கள் கூச்சலிட்டனர். அதனால் அவை நடவடிக்கைகளை 10 நிமிடங்களுக்கு ஒத்திவைப்பதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்தார். அதன்பின் அதிபர் கோத்தபய ராஜபக்சே நாடாளுமன்ற அவையை விட்டு வெளியேறிச் சென்றார். இதனால் சிறிது நேரம் நாடாளுமன்றத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
சர்வதேச நாணய நிதியத்துடன் நடத்திய பேச்சுவார்த்தை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கே பேசிய போது, மீண்டும் உறுப்பினர்கள் அமளியில் ஈடுபட்டனர். எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, பிரதமர் ரணில் விக்கிரமசிங்கேவுடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் கூறுகையில், ‘கடும் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில், சர்வதேச நாடுகளின் ஆதரவைப் பெறுவதில் பிரதமரும் அவரது அரசாங்கமும் சரியாக செயல்படவில்லை’ என்று குற்றம்சாட்டினார். இதேபோல் மற்ற எதிர்கட்சிகளின் உறுப்பினர்களும் கூச்சல் குழப்பங்களை ஏற்படுத்தியதால் அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டன.