மத்திய அமைச்சர்கள் முக்தார் அப்பாஸ் நக்வி, ஆர்.சி.பி.சிங் ராஜினாமா!

மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் பதவியை முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா செய்துள்ளார்.

மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சராக இருந்தவர், முக்தார் அப்பாஸ் நக்வி. இவர், 2016 ஆம் ஆண்டு ஜார்க்கண்ட் மாநிலத்தில் இருந்து நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். இவரது பதவிக்காலம் நாளையுடன் முடிவடைகிறது. இந்நிலையில், நாடாளுமன்ற மாநிலங்களவைத் தேர்தலில் மீண்டும் போட்டியிட, முக்தார் அப்பாஸ் நக்விக்கு பாஜக மேலிடம் வாய்ப்பு வழங்கவில்லை. இதனால் அவர் மத்திய அமைச்சர் பதவியில் தொடர முடியாத சூழ்நிலை உருவானது.

இந்நிலையில் இன்று, மத்திய சிறுபான்மையினர் நலத் துறை அமைச்சர் பதவியில் இருந்து முக்தார் அப்பாஸ் நக்வி விலகி உள்ளார். முன்னதாக, டெல்லியில் இன்று, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாஜக தேசியத் தலைவர் ஜே.பி.நட்டா ஆகியோரை அவர் சந்தித்து பேசினார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையில் இடம் பெற்ற முக்தார் அப்பாஸ் நக்வி, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவையில் அங்கம் வகித்தார். இதே போல், மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கும், முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அமைச்சரவையிலும் இடம் பெற்றிருந்தார்.

இதற்கிடையே, வரும் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் தேதி நடைபெற உள்ள குடியரசுத் துணைத் தலைவர் தேர்தலில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில், முக்தார் அப்பாஸ் நக்வி களமிறங்க வாய்ப்பு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முகமது நபிகள் குறித்து, பாஜக முன்னாள் செய்தித் தொடர்பாளர் நுபுர் சர்மா சர்ச்சை கருத்துத் தெரிவித்து பூதாகரமாக வெடித்த நிலையில், முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த முக்தார் அப்பாஸ் நக்வியை, குடியரசுத் துணைத் தலைவர் பதவியில் அமர வைத்து அழகு பார்க்க பாஜக முடிவு செய்து உள்ளதாகவும் கூறப்படுகிறது. இதே போல், மத்திய உருக்குத் துறை அமைச்சர் ஆர்.சி.பி.சிங், நாளையுடன் நாடாளுமன்ற மாநிலங்களை உறுப்பினர் பதவிக்காலம் முடிவடைவதை அடுத்து ராஜினாமா செய்தார்.