மின்சார வாரிய தேர்வை ரத்து செய்ததால் இளைஞர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே இந்த தேர்வை டி.என்.பி.எஸ்.சி. மூலம் விரைவில் நடத்த வேண்டும் என்று டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
சென்னை, தமிழ்நாடு மின்வாரியத்திற்கு 1,300 கணக்கீட்டாளர்கள், 600 உதவி என்ஜினீயர்கள், 500 இளநிலை உதவியாளர்கள், 2,900 கள உதவியாளர்கள் என மொத்தம் 5,300 பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான 4 அறிவிக்கைகள் கடந்த 2020-ம் ஆண்டு ஜனவரி 1, பிப்ரவரி 15, மார்ச் 19 ஆகிய தேதிகளில் வெளியிடப்பட்டன. 18 உதவி கணக்கு அலுவலர் பணிகளுக்கான ஆள்தேர்வு அறிவிக்கை 2021-ம் ஆண்டு பிப்ரவரி 15-ந் தேதி வெளியிடப்பட்டது. கொரோனா பரவல் காரணமாக இந்த தேர்வுகள் பலமுறை ஒத்திவைக்கப்பட்டன. கடைசியாக 2021-ம் ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த இந்தத் தேர்வுகளும் கொரோனா பரவல் மற்றும் சட்டப்பேரவைத் தேர்தலை காரணம் காட்டி ஒத்திவைக்கப்பட்டன.
விரைவில் இத்தேர்வுகள் நடத்தப்படும் என்று விண்ணப்பித்தவர்கள் எதிர்பார்த்திருந்த நிலையில்தான், இந்தத் தேர்வு அறிவிக்கைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டுள்ளன. தமிழ்நாடு அரசு பொதுத்துறை நிறுவனங்களுக்கான ஆள்தேர்வுகள் அனைத்தும் இனி தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாகத்தான் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுவிட்டதால், தங்களால் இனி ஆட்களை தேர்வு செய்ய முடியாது என்று மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
மின்வாரியப் பணியாளர்களை தேர்ந்தெடுப்பதற்கான போட்டித் தேர்வுகள் மின்வாரியத்தால் நடத்தப்படுவதை விட அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நடத்தப்படுவது நேர்மையானதாகவும், வெளிப்படை தன்மை கொண்டதாகவும் இருக்கும். அதில் மாற்றுக்கருத்துக்கு இடமில்லை. ஆனால், இந்த விசயத்தில் செய்யப்படும் காலதாமதத்தால் படித்த இளைஞர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை எவராலும் ஈடுகட்ட முடியாது. பெரும்பான்மையான மின்வாரியப் பணிகளுக்கு அதிகபட்ச வயது வரம்பாக 30, 32, 35 ஆண்டுகள் நிர்ணயிக்கப்பட்டுள்ளன. மின்வாரியம் அறிவித்தப் போட்டித் தேர்வுகளுக்கு விண்ணப்பித்தவர்கள், இந்த பணிகளுக்காக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் மீண்டும் விண்ணப்பிக்கும் போது, அவர்களின் மூன்றில் ஒரு பங்கினர் அதிகபட்ச வயது வரம்பை கடந்து விடுவார்கள். அதனால், அவர்கள் மின்சார வாரியத்தில் பணியில் சேரும் வாய்ப்பை இழந்து விடுவர். இது சமூக அநீதியாகும்.
எனவே, தமிழ்நாடு மின்சார வாரியம் 5,318 பணிகளுக்கான போட்டித் தேர்வுகளை உடனடியாக நடத்த வேண்டும். அதில் ஏதேனும் தடைகள் இருந்தால், மின்வாரியம் வெளியிட்ட அறிவிக்கைப்படி விண்ணப்பித்தவர்களுக்கு, பழைய விண்ணப்பங்களின் அடிப்படையில் தேர்வுகளை மட்டும் டி.என்.பி.எஸ்.சி. மூலம் அடுத்த ஒரு மாதத்திற்குள் நடத்தி முடிவுகளை வெளியிட தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.