எஸ்.பி.கே நிறுவன விசாரணை நிறைவு: முக்கிய ஆவணங்கள் சிக்கின!

தேசிய நெடுஞ்சாலை ஒப்பந்தக்காரர் செய்யாத்துரை வீடு, அலுவலகங்களில் நடந்த வருமானவரி சோதனை நேற்று இரவில் நிறைவு அடைந்தது. அப்போது, 4 பெட்டிகளில் நகை, பணம், ஆவணங்களை அதிகாரிகள் எடுத்துச்சென்றனர்.

அருப்புக்கோட்டை ராகவேந்திரா நகரில் எஸ்.பி.கே கன்ஸ்டிரக்ஷன் நிறுவனத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் இரண்டு நாளாக நடத்திய விசாரணை நிறைவடைந்தது. பணம், நகை மற்றும் முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல்.

விருதுநகர் மாவட்டத்தில், நெடுஞ்சாலைத்துறை முதன்மை ஒப்பந்த நிறுவனமான எஸ்.பி.கே கன்ஸ்ட்ரக்ஷன்ஸ் நிறுவனம் அருப்புக்கோட்டையை தலைமை இடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. அதன் உரிமையாளர் செய்யாதுரையின் வீடு மற்றும் அலுவலகம் மதுரை சாலை ராகவேந்திரா நகரில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் திடீரென மதுரை, திருச்சி மற்றும் திருநெல்வேலியில் இருந்து வந்த வருமானத்துறை ஆய்வாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்ட 40-க்கும் மேற்பட்டோர் செய்யாதுறை மற்றும் அவரது மகன்களான கருப்பசாமி, நாகராஜன், ஈஸ்வரன் மற்றும் பாலசுப்பிரமணி ஆகியோர் வீடுகள் மற்றும் அலுவலகம் என ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை மேற்கொண்டனர்.

தங்க நகை எடை போடும் தராசு, பணம் எண்ணும் இயந்திரம் என்ன பல்வேறு உபகரணங்கள் கொண்டு சுமார் 10 மணி நேரத்திற்கும் மேலாக சோதனை செய்தனர். அந்த சோதனையில் பல முக்கிய ஆவணங்கள் மற்றும் பணம், தங்க நகைகள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

கைப்பற்றப்பட்ட பணம், நகைகள் மற்றும் ஆவணங்கள் குறித்து செய்யாதுரை மற்றும் அவர்களது மகன்களிடம் அதிகாரிகள் நேற்று இரண்டாவது நாளாக விசாரணை நடத்தினர். நேற்று காலை விசாரணை துவங்கிய நிலையில் சுமார் 11 மணி நேரம் வீட்டில் உள்ள பணம், நகை மற்றும் முக்கிய ஆவணங்கள் குறித்து செய்யாதுறை மற்றும் அவரது மகன்களிடம் விசாரணை நடைபெற்றது. விசாரணையில் பெறப்பட்ட வாக்குமூலங்களை வருமான வரித்துறையினர் ஆவணங்களாக மாற்றி விசாரணையை நிறைவு செய்தனர். விசாரணை முடிந்த நிலையில், 4 அட்டைப்பெட்டிகளில் பணமும், 300 பவுனுக்கு மேலாக நகைகளும் மற்றும் சில முக்கிய ஆவணங்களும் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.