அமர்நாத் குகை கோவில் அருகே மேக வெடிப்பு: 16 பேர் பலி!

அமர்நாத் குகைக் கோவில் அருகே, மேக வெடிப்பு காரணமாக நேற்று மாலை பெய்த பலத்த மழையில் சிக்கி 16 பேர் பலியாகினர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் மாயமாகி விட்டதால் அவர்களை மீட்கும் பணியில் தேசிய பேரிடர் மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர்.

ஜம்மு – காஷ்மீரின் பஹல்காம் மாவட்டத்தில் அமைந்துள்ள அமர்நாத் குகைக் கோவிலில் இயற்கையாக உருவாகும் பனி லிங்கத்தை தரிசிக்க, கடந்த 30 ஆம் தேதி அமர்நாத் யாத்திரை துவங்கியது. இதுவரை 72 ஆயிரம் பேர் தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில், மோசமான வானிலை காரணமாக அமர்நாத் குகைக் கோவிலுக்கு செல்ல கடந்த வாரம் தற்காலிக தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து, மலையில் ஏறியிருந்த பக்தர்கள் ஆங்காங்கே ‘டென்ட்’களில் தங்க வைக்கப்பட்டு இருந்தனர்.

இந்நிலையில், நேற்று மாலை 5:30 மணிக்கு திடீரென பலத்த மழை கொட்டியது. மலைப் பகுதியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அமர்நாத் குகைக்கோவிலுக்கு அருகே ஒரு பகுதியில் டென்ட்களில் தங்கியிருந்த பலர் இழுத்துச் செல்லப்பட்டனர். இதுவரை 16 உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளன. காணாமல் போன 40க்கும் மேற்பட்டோரை தேடும் பணி தீவிரமாக நடக்கிறது. மோப்ப நாய்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளன. மேலும், பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்த மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இமயமலையில் நடந்த துயர சம்பவம் குறித்து பிரதமர் நரேந்திர மோடி கேட்டு அறிந்து கொண்டார். மேலும், மீட்புப் பணிகளை துரிதப்படுத்த அதிகாரிகளுக்கு அவர் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.