முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான வழக்கு ரத்து!

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டனுக்கு எதிரான நடிகையின் வழக்கை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது

கடந்த அதிமுக ஆட்சியில் தகவல் தொழில்நுட்பதுறை அமைச்சராக இருந்தவர் மணிகண்டன். இவர் தன்னை திருமணம் செய்துகொள்வதாகச் கூறி உறவு வைத்து, பின்னர் கரு கலைப்பு செய்து ஏமாற்றியதாக திரைப்பட துணை நடிகை அளித்த புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது அடையார் அனைத்து மகளிர் போலீசார் வழக்குபதிவு செய்து கைது செய்தனர். அதன்பின் மணிகண்டன் தரப்பில் ஜாமீன் கேட்டு பலமுறை நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்யப்பட்ட நிலையில், நிபந்தனைகளுடன் உயர் நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. இந்நிலையில், இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீது சைதாப்பேட்டை 11ஆவது நீதிமன்றத்தில் அடையாறு அனைத்து மகளிர் போலீசார் 351 பக்க குற்றப்பத்திரிகையைத் தாக்கல் செய்திருந்தனர்.

வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், தன் மீதான வழக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் சார்பில் வழக்கு தொடரப்பட்டிருந்தது. இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி சதீஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தபோது, நடிகை சார்பில் இந்த புகாரை திரும்பபெற்றதாக தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, தன் மீதான புகழுக்கு களங்கம் விளைவித்ததாக மனுதரார் சார்பில் புகார் அளித்தால் என்னவாகும் என்று நடிகை தரப்பிற்கு கண்டனம் தெரிவித்து, புகாரை திரும்ப பெற்றதால் முன்னாள் அமைச்சர் மணிகண்டன் மீதான வழக்கை ரத்து செய்து உத்தரவிட்டார்.