இலங்கை அரசுக்கும், மக்களுக்கும், இந்தியா உதவும் என நம்புகிறோம்: சோனியா

இலங்கையில் ஏற்பட்டுள்ள சிரமங்களை கையாள அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் இந்தியா உதவும் என நம்புவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்து உள்ளார்.

அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள அந்நாட்டு மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்துள்ளனர். தலைநகர் கொழும்புவில் உள்ள இலங்கை அதிபர் மாளிகையை சூறையாடிய போராட்டக்காரர்கள், மாளிகையை முழுவதுமாக தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக, ரணில் விக்ரமசிங்கே அறிவித்துள்ளார். மேலும், வரும் 13 ஆம் தேதி அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக, கோத்தபய ராஜபக்சே உறுதி அளித்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது,

இந்நிலையில், இலங்கையில் தற்போது ஏற்பட்டுள்ள சிரமங்களை கையாள அந்நாட்டு அரசுக்கும், மக்களுக்கும் இந்தியா உதவும் என நம்புவதாக காங்கிரஸ் கட்சித் தலைவர் சோனியா காந்தி தெரிவித்து உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது:-

இலங்கையில் ஏற்பட்டுள்ள அரசியல் சூழ்நிலையை காங்கிரஸ் கட்சி கவலையுடன் கவனித்து வருகிறது. பொருளாதார சவால்கள், விலைவாசி உயர்வு, உணவு , எரிபொருள் தட்டுப்பாடு ஆகியவை அங்குள்ள மக்களிடையே பெரும் சிரமத்தையும், துயரத்தையும் ஏற்படுத்தி உள்ளது. இந்த துயரமான நெருக்கடியான தருணத்தில், இலங்கை மற்றும் அந்நாட்டு மக்களுக்கு காங்கிரஸ் தனது ஆதரவை தெரிவிப்பதுடன், தற்போது ஏற்பட்டுள்ள பிரச்னையை அவர்களால் தீர்க்க முடியும் என நம்புகிறது.

தற்போதைய சூழ்நிலையில், சிரமங்களை கையாள இலங்கை அரசுக்கும், மக்களுக்கும், இந்தியா உதவும் என நம்புகிறோம். இலங்கைக்கு அனைத்து உதவிகளையும் ஆதரவையும் சர்வதேச சமூகம் வழங்க வேண்டும் என காங்கிரஸ் கட்சி சார்பில் கேட்டு கொள்கிறேன். இவ்வாறு சோனியா காந்தி தெரிவித்து உள்ளார்.