அதிமுக பலவீனப்படுவது அதிமுகவுக்கு மட்டுமல்ல, தமிழகத்தின் நலனுக்கும் அது பாதிப்பை ஏற்படுத்தும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கூறியுள்ளார்.
அதிமுக உட்கட்சி மோதல் உச்சகட்டத்தை அடைந்த நிலையில் இன்று பொதுக்குழு கூட்டம் நடைபெற உள்ளது. பொதுக்குழு தொடர்பான உயர் நீதிமன்ற தீர்ப்பு 9 மணிக்கு வெளியாக உள்ளது. அதிமுகவின் தற்போதைய நிலை குறித்து விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் பேசியுள்ளார்.
சென்னை தாம்பரம் அடுத்த சேலையூர் கேம்ப் ரோட்டில் தனியார் திருமண மண்டபத்தில் நடந்த அரசு அலுவலர் நலச்சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. இதில் சிறப்பு அழைப்பாளராக விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் கலந்து கொண்டு சிறப்பித்தார். அப்போது அவர் பேசியதாவது:-
அதிமுக தலைமை குறித்து அதிமுக பொதுக்குழு முடிவு செய்யும். அதிமுக பலவீனப்படுவது, அதிமுகவை மட்டுமில்லை; தமிழ்நாட்டு நலனுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். ஏனெனில் அதிமுகவின் பலவீனத்தை சங்கப் பரிவார் தங்களை வலிமைபடுத்தி கொள்ள பயன்படுத்துவார்கள். தமிழ்நாட்டில் சங்கப் பரிவார் வலிமை பெறுவது பெரும் தீங்கை விளைவிக்கும். சமீபத்தில் உள்துறை அமைச்சரும், பாஜக மூத்த தலைவர்களில் ஒருவருமான அமித்ஷா கூட பாஜகவின் அடுத்த இலக்கு தென்னிந்திய மாநிலங்கள் தான் என சொல்லியிருக்கிறார். தமிழ்நாட்டை மனதில் வைத்து தான் அவர் இதை கூறியிருக்கிறார். இத்தனை ஆண்டு காலம் அவர்கள் பாஜக தமிழகத்தில் மேற்கொண்ட முயற்சி வெற்றி பெறவில்லை. இப்போது தென்னிந்திய மாநிலங்களில் குறிவைத்து காய்களை நகர்த்துகிறார்கள். அதிமுக பலவீனப்படுவது அதிமுகவிற்கு மட்டும் பாதிப்பை ஏற்படுத்தாது. இதை அதிமுக தொண்டர்கள் புரிந்து கொள்ள வேண்டும். அதிமுக தலைவர்களுக்காக சொல்லவில்லை, தொண்டர்களுக்காக சொல்கிறேன். இவ்வாறு திருமாவளவன் கூறியுள்ளார்.