சுகேஷ் சந்திரசேகரிடம் லஞ்சம் பெற்ற 81 டெல்லி சிறை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு!

பல்வேறு பண மோசடி குற்றங்களில் ஈடுபட்டு சிறையில் உள்ள சுகேஷ் சந்திரசேகரிடம் லஞ்சம் பெற்ற டில்லி ரோகிணி சிறையைச் சேர்ந்த 81 அதிகாரிகள் மீது பொருளாதார குற்றப்பிரிவினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின், இரட்டை இலை சின்னத்தை பெறுவதில், பழனிசாமி – தினகரன் இடையே மோதல் எழுந்தது. அப்போது, சின்னத்தை பெற்றுத்தர தேர்தல் கமிஷனுக்கு லஞ்சம் தர முயன்ற வழக்கில், தினகரன் மற்றும் சுகேஷ் சந்திரசேகர் கைது செய்யப்பட்டனர்; தினகரன் ஜாமினில் விடுவிக்கப்பட்டார். சுகேஷ் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த சுகேஷ் சந்திரசேகர் பல்வேறு பண மோசடி வழக்குகளில் ஏற்கனவே சிக்கி சிறை சென்றவர். இவர் மீது பணப்பரிமாற்ற மோசடி வழக்குகளும் உள்ளன. இவரும், இவரது மனைவியும், நடிகையுமான லீனா பால் இருவரும் தற்போது டெல்லி திஹார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

சிறையில் இருக்கும் போதே வெளியில் உள்ள பல்வேறு நபர்களை ஏமாற்றி கோடிக்கணக்கில் கொள்ளை அடித்து உள்ளார். ‘போர்டிஸ்’ மற்றும் ‘ரான்பாக்சி’ நிறுவனங்களின் முன்னாள் இயக்குனர்கள் ஷிவிந்தர் மற்றும் மல்விந்தர் சிங் பண மோசடி வழக்கில் கைதாகி திஹார் சிறையில் உள்ளனர். இவர்களது விடுதலைக்கு உதவுவதாக கூறி, மத்திய உள்துறை அமைச்சக செயலர் போல பேசி, அவர்களது குடும்பத்தினரிடம் 200 கோடி ரூபாய் வரை ஏமாற்றி உள்ளார்.

இந்நிலையில், சுகேஷ் சந்திரசேகர் மற்றும் அவரது மனைவி தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் கடந்த மாதம் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், சிறையில் பாதுகாப்பாக இருப்பதற்காக, கடந்த இரண்டு ஆண்டுகளில் திஹார் சிறை அதிகாரிகளுக்கு 12.50 கோடி ரூபாய் வரை லஞ்சம் கொடுத்துள்ளதாகவும், தற்போது அதிக பணம் கேட்டு அவர்கள் மிரட்டுவதால் தங்கள் உயிருக்கு ஆபத்து உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர். டெல்லியில் பல்வேறு சிறைகளில் சுகேஷ் அடைக்கப்பட்டுள்ளார். அங்கு பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி ரோகிணி சிறையில் உள்ள, 81 அதிகாரிகள் சுகேஷிடம் லஞ்சம் பெற்ற விபரம் தெரியவந்துள்ளது. அவர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சிறையில் சுதந்திரமாக இருக்கவும், ‘மொபைல் போன், கணினி’ உள்ளிட்ட அனைத்து விதமான வசதிகள் பெறவும் லஞ்சம் கொடுக்கப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.