தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி: அன்புமணி

தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் இடஒதுக்கீடு மறுக்கப்படுவது சமூக அநீதி என்று, அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு அரசு பள்ளிகளில் 13,331 தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பதற்கான நடவடிக்கைகளில் பள்ளிக் கல்வித்துறை தீவிரமாக ஈடுபட்டிருக்கும் நிலையில், அதில் இட ஒதுக்கீட்டு முறை கடைபிடிக்கப்படாது என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. பள்ளிக்கல்வித்துறை வட்டாரங்களில் இதுபற்றி கேட்ட போது, தற்காலிக ஆசிரியர்கள் நியமனம் பள்ளிகள் அளவில், பள்ளி மேலாண்மை குழுவால் மேற்கொள்ளப்பட இருப்பதால், அதில் இடஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்துவது சாத்தியமில்லை என்று விளக்கம் கிடைத்திருக்கிறது. இந்த விளக்கத்தை ஏற்கவே முடியாது. நியமன நடைமுறைகளை காரணம் காட்டி இட ஒதுக்கீட்டை செயல்படுத்த முடியாது என்று பள்ளிக்கல்வித் துறையே கூறுவது தமிழ்நாட்டில் காலம் காலமாக கடை பிடிக்கப்பட்டு வரும் சமூக நீதிக்கு இழைக்கப்படும் துரோகம் ஆகும். இந்த சமூக அநீதியை தமிழக அரசு ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

தமிழக அரசு கல்லூரிகளில் 5,584 கவுரவ விரிவுரையாளர்கள் நியமிக்கப்பட்ட போதும் இட ஒதுக்கீடு கடைபிடிக்கப்பட வில்லை. ஆசிரியர்கள் நியமனத்திலும் இட ஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை என்றால், அதனால் சமூக நீதிக்கு ஏற்படும் பின்னடைவை சரி செய்ய முடியாமல் போய்விடும். ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தற்காலிக அடிப்படையில் நியமிக்கப்படக் கூடாது. காலமுறை ஊதிய அடிப்படையில் தான் நியமிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் நிலைப்பாடு. தவிர்க்க முடியாமல் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டால், அதில் இட ஒதுக்கீடு கண்டிப்பாக கடைபிடிக்கப்பட வேண்டும். இதை தமிழ்நாடு அரசின் கொள்கை முடிவாக முதல்-அமைச்சர் அறிவிப்பது தான் குழப்பங்களைத் தீர்க்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்காலிக ஆசிரியர் நியமன பணிகளை வேகப்படுத்த வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:-

தற்காலிக ஆசிரியர் நியமனம் தொடர்பான பணிகளை வேகப்படுத்த வேண்டும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள், TRB நடத்திய சான்றிதழ் சரிபார்ப்பில் பங்கேற்றவர்களை மட்டுமே தற்காலிக ஆசிரியர் பணியிடங்களுக்கு தேர்வு செய்ய வேண்டும். அனைத்து பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களும் வரும் 15-ம் தேதிக்குள் தகுதியானவர்களை தேர்வு செய்ய வேண்டும். தேர்வானவர்களின் பட்டியலை சரிபார்த்து வரும் 18-ம் தேதிக்குள் CEO-க்கள் ஒப்புதல் தர வேண்டும். தற்காலிக ஆசிரியராக தேர்வானோர் வரும் 20-ம் தேதி அவரவருக்கு ஒதுக்கப்பட்ட பள்ளிகளில் பணியில் சேர வேண்டும். 24 மாவட்டங்களில் மட்டும் தற்காலிக ஆசிரியர் நியமனம் செய்யப்பட உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.