அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமனம்!

அதிமுக பொருளாளராக திண்டுக்கல் சீனிவாசன் நியமிக்கப்படுவதாக இடைக்கால பொதுச் செயலாளராக பொறுப்பேற்றுள்ள எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

பரபரப்பான அதிரடி திருப்பங்களுக்கு இடையே, சென்னை வானகரத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில், அஇஅதிமுக பொதுக்குழுக் கூட்டம் நேற்று காலை 9:15 மணி அளவில் தொடங்கியது. இந்தக் கூட்டத்தில், இரட்டைத் தலைமையை ரத்து செய்து, பொதுச் செயலாளர் பதவியை மீண்டும் கொண்டு வருவது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது. மேலும் பொதுச் செயலாளர் தேர்ந்தெடுக்கப்படும் வரை, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமியை நியமிக்கும் தீர்மானமும் நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதைத் தொடர்ந்து, அதிமுக பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவோடு, இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இதற்கிடையே கட்சி நலனுக்கு எதிராக செயல்பட்ட ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்களை கட்சியில் இருந்து நீக்கும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதை அடுத்து, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து, ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது ஆதரவாளர்கள் வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து நீக்கப்படுவதாக பொதுக்குழுவில் அறிவிக்கப்பட்டது. இதன்படி, அதிமுக பொருளாளர் உள்ளிட்ட பதவிகள் ஓ.பன்னீர்செல்வத்திடம் இருந்து பறிக்கப்பட்டு உள்ளன.

இந்நிலையில், அதிமுகவின் புதிய பொருளாளராக, முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசனை நியமித்து, இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு பிறப்பித்து உள்ளார்.