குடியரசுத் தலைவர் தேர்தல்: உத்தவ் தாக்கரேவுக்கு அடுத்த நெருக்கடி!

குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே தலைமையில் நடைபெற்ற அக்கட்சி எம்பிக்கள் கூட்டத்தில், தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர் திரெளபதி முர்முவுக்கு ஆதரவு அளிக்கும்படி, பெரும்பான்மையான எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

மகாராஷ்டிர மாநிலத்தில், முதலமைச்சராக இருந்த சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரேவுக்கு எதிராக, அக்கட்சியைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, தனது ஆதரவு எம்எல்ஏக்களை திரட்டிக் கொண்டு போர்க்கொடி தூக்கினார். இதை அடுத்து, பெரும்பான்மை இல்லாதததை உணர்ந்த உத்தவ் தாக்கரே, முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார். இதன் பின்னர், பாஜகவுடன் கூட்டணி அமைத்து, மகாராஷ்டிர மாநிலத்தில், சிவசேனா அதிருப்தித் தலைவர் ஏக்நாத் ஷிண்ட ஆட்சி அமைத்தார். தொடர்ந்து, மகாராஷ்டிர மாநில முதலமைச்சராக அவர் பதவி ஏற்றுக் கொண்டார். துணை முதலமைச்சராக, பாஜகவைச் சேர்ந்த தேவேந்திர பட்னவிஸ் பதவி ஏற்றுக் கொண்டார். இதற்கிடையே, உண்மையான சிவசேனா யார் என்பது தொடர்பாக, உத்தவ் தாக்கரே – ஏக்நாத் ஷிண்டே இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத் தலைநகர் மும்பையில் உள்ள, சிவசேனா கட்சித் தலைவர் உத்தவ் தாக்கரே வீட்டில், அவரது தலைமையில், குடியரசுத் தலைவர் தேர்தல் தொடர்பாக, அக்கட்சி எம்பிக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது. மொத்தம் உள்ள 18 சிவசேனா எம்பிக்களில், 13 பேர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், 3 பேர் காணொலி வாயிலாக பங்கேற்றனர் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. மீதம் உள்ள இரண்டு எம்பிக்கள், முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே ஆதரவாளர்கள்.

இந்தக் கூட்டத்தில், தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் நிறுத்தப்பட்டுள்ள பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த ஜார்க்கண்ட் மாநில முன்னாள் ஆளுநர் திரெளபதி முர்முவை ஆதரிக்க வேண்டும் என, அனைத்து எம்பிக்களும், உத்தவ் தாக்கரேவிடம் வலியுறுத்தி உள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தத் தகவலை, அக்கட்சி எம்பி கஜானன் கிரிட்கரும் உறுதிப்படுத்தி உள்ளார். பாஜக வேட்பாளரை ஆதரிக்க வேண்டும் என, எம்பிக்கள் வலியுறுத்தி உள்ளதால், உத்தவ் தாக்கரேவுக்கு புதிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது.