இலங்கையில் மக்கள் போராட்டம் வெடித்துள்ள நிலையில், துபாய்க்கு தப்பிச் செல்ல முயன்ற இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சகோதரர் பசில் ராஜபக்சேவை, விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.
அண்டை நாடான இலங்கையில், வரலாறு காணாத அளவுக்கு பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. இதனால், பெட்ரோல், டீசல், சமையல் கேஸ் சிலிண்டர், மளிகைப் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களின் விலை பல மடங்கு உயர்ந்து உள்ளது. இதனால் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ள அந்நாட்டு மக்கள், அதிபர் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிராக போராட்டத்தில் குதித்து உள்ளனர். தலைநகர் கொழும்புவில் உள்ள இலங்கை அதிபர் மாளிகையை சூறையாடிய போராட்டக்காரர்கள், மாளிகையை முழுவதுமாக தங்கள் கட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். இதற்கிடையே, இலங்கை பிரதமர் பதவியில் இருந்து விலக முடிவு செய்து உள்ளதாக, ரணில் விக்ரமசிங்கே அறிவித்தார். மேலும், அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்சே நாளை ராஜினாமா செய்ய இருப்பதாகவும் பிரதமர் அலுவலகம் உறுதி அளித்துள்ளது.
இந்நிலையில் இன்று, இலங்கையில் இருந்து துபாய் நகருக்கு, கொழும்பு விமான நிலையத்தில் இருந்து விமானம் மூலம் தப்பிச் செல்ல முயன்ற, அதிபர் கோத்தபய ராஜபக்சே சகோதரர் பசில் ராஜபக்சேவை, விமான நிலையத்தில் அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். நள்ளிரவு 12:15 மணி அளவில் கொழும்பு விமான நிலையத்திற்கு பசில் ராஜபக்சே வந்ததாகவும், விஐபி வரிசையில் இருந்த அவரை பொது மக்கள் அடையாளம் கண்டனர். அப்போது அங்கிருந்த பயணிகளில் சிலர், பசில் ராஜபக்சேவை வெளிநாடு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்றும், அவர்களது உடைமைகளையும் ஆவணங்களையும் பரிசோதிக்கக் கூடாது என்றும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால் விமான நிலைய முனையத்தின் அதிகாரிகள், பசில் ராஜபக்சேவையும் அவரது குடும்பத்தினரையும் சோதனையிட மறுத்தனர். மேலும், அதிகாரிகள் அவர்களிடம் இருந்து விலகிச் சென்றனர். அதிர்ச்சியடைந்த பசில் ராஜபக்சே மற்றும் குடும்பத்தினர் வேறு வழியின்றி திரும்பிச் சென்றதாக கூறப்படுகிறது. இதனால் விமான நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் ராஜினாமா கடிதத்தில் கோத்தபய ராஜபக்சே கையெழுத்திட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்தக் கடிதத்தில், 13 ஆம் தேதியை குறிப்பிட்டு, கோத்தபய ராஜபக்சே கையெழுத்திட்டு உள்ளார். இந்தக் கடிதம், முறைப்படி நாடாளுமன்ற சபாநாயகருக்கு அனுப்பப்பட்டு உள்ளது. அதன்படி, சபாநாயகர் வாயிலாக கோத்தபய ராஜபக்சே ராஜினாமா தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக நாளை வெளியாக உள்ளது.
இந்த நிலையில் அலரி மாளிகையில் 2 குழுக்களுக்கு இடையில் தீவிர மோதல் ஏற்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். 2 குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதலில் 10 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதனால் அவர்கள் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவவர்கள் கொழும்பு தேசிய மருத்துவமனையில் இன்று காலை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அலரி மாளிகையில் நடைபெற்ற இந்த சம்பவத்தினால் காயம் அடைந்த பெண் ஒருவரின் கழுத்து வெட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. அலரி மாளிகையில் மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவாளர்களுக்கும், போராட்டக்காரர்களுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டதாக முதல் கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.