ஒன்றரை கோடி தொண்டர்களும் என்னைத்தான் ஆதரிக்கிறார்கள்: சசிகலா

ஒன்றரை கோடி தொண்டர்களும், பொதுமக்களும் என்னைத்தான் ஆதரிக்கிறார்கள் என்றார் சசிகலா.

புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடியில் திருமண நிகழ்வில் வி.கே.சசிகலா நேற்று பங்கேற்றார். பின்னர் சசிகலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

இன்றைய(நேற்று) நிகழ்வுகளை பார்க்கும்போது, அ.தி.மு.க. தொண்டர்கள் அனைவரும் ஒன்று சேரும் நேரம் வந்துவிட்டது. தலைமை பதவியை அடித்துப் பிடிக்க நினைத்தால் அது நிலைக்காது. பணம் அதிகாரம் வைத்து அடைந்த எந்தப் பதவியும் நிலைக்காது. சட்டப்படி செல்லாது. நிழலுக்காக சண்டையிட்டு நிஜத்தை இழந்து விடக்கூடாது. ஒட்டுமொத்த தொண்டர்களின் ஆதரவோடு, நிஜத்தை நிச்சயம் அடைவோம். ஒன்றரை கோடி தொண்டர்களும், பொதுமக்களும் என்னைதான் ஆதரிக்கிறார்கள். பொதுக்குழுவில் நிதிநிலை அறிக்கைகளை அறிவிக்க முடியாது. அப்படி இருக்கையில், இது எப்படி பொதுக்குழுவை ஏற்றுக்கொள்ள முடியும். அ.தி.மு.க. பொதுக்குழு நடந்ததே செல்லாது.

இன்று(நேற்று) நடைபெற்ற அதிமுக பொதுக்குழுக் கூட்டம் செல்லாது. எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளர் ஆனதே கேள்விக்குறியாக உள்ளபோது, ஓ.பன்னீர்செல்வம் நீக்கப்பட்டது எப்படிச் செல்லும்? விரைவில், கட்சியிலிருந்து வெளியில் சென்றவர்கள், அதிருப்தியாளர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து, ஒரே தலைமையின் கீழ் கொண்டுவந்து, தமிழகத்தில் மீண்டும் ஆட்சியைப் பிடிப்போம். இவ்வாறு அவர் கூறினார்.