நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையாவுக்கு 4 மாதம் ஜெயில்!

கோர்ட்டு உத்தரவை மீறி விஜய் மல்லையா தனது குடும்பத்தினருக்கு ரூ.317 கோடியை அனுப்பியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் அவருக்கு 4 மாத சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.

பிரபல தொழில் அதிபரான விஜய் மல்லையா, வங்கிகளில் வாங்கிய ரூ. 9 ஆயிரம் கோடி கடனை திரும்ப செலுத்தாமல் இங்கிலாந்து நாட்டுக்கு தப்பி சென்றார். 2016-ம் ஆண்டில் இருந்து அவர் லண்டனில் உள்ளார். இதற்கிடையே வங்கிகளில் வாங்கிய கடனை திரும்ப செலுத்தாமல் பணப்பரிவர்த்தனையில் ஈடுபடக்கூடாது என்று விஜய் மல்லையாவுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால் கோர்ட்டு உத்தரவை மீறி விஜய் மல்லையா தனது குடும்பத்தினருக்கு ரூ.317 கோடியை அனுப்பியதால் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் விஜய் மல்லையா குற்றவாளி என்று கடந்த 2017-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது. இந்த தீர்ப்பை மறு ஆய்வு செய்ய கோரி விஜய் மல்லையா சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனு 2020-ம்ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டது. மேலும் அவர் கோர்ட்டில் நேரிலோ அல்லது வக்கீல் மூலமாகவோ ஆஜராக சுப்ரீம் கோர்ட்டு பலமுறை வாய்ப்பளித்தது. ஆனால் விஜய் மல்லையா ஆஜராகவில்லை.

இந்த வழக்கு கடந்த மார்ச் 1-ந்தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது விஜய் மல்லையாவுக்கான தண்டனை விவரம் பின்னர் அறிவிக்கப்படும் என்று சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்து விசாரணையை ஒத்திவைத்தது. அதன்படி இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது நீதிபதி லலித் தலைமையிலான பெஞ்ச் விஜய் மல்லையாவுக்கான தண்டனை விவரத்தை அறிவித்தது. அதில், கோர்ட்டில் தகவல் தெரிவிக்காமல் விஜய் மல்லையா தனது குடும்ப உறுப்பினர்களுக்கு பணப்பரிவர்த்தனை செய்த குற்றத்திற்காக அவருக்கு 4 மாத சிறை தண்டனையும் ரூ.2 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுகிறது. ரூ.317 கோடியை வட்டியுடன் அவர் திருப்பி செலுத்த வேண்டும். அத்தொகையை திருப்பி செலுத்தாத பட்சத்தில் அவரது சொத்துக்கள் முடக்கப்படும் என்று தீர்ப்பில் நீதிபதிகள் தெரிவித்தனர்.