குறுக்கு வழியில் ஓட்டு வாங்குவது எளிது. ஆனால், குறுக்கு வழி அரசியல் நாட்டை அழித்து விடும் என பிரதமர் நரேந்திர மோடி கூறியுள்ளார்.
ஜார்க்கண்ட் மாநிலம் தியோகார் நகரில் நடந்த அரசு விழாவில், விமான நிலையம், வளர்ச்சி திட்டங்கள் 16,800 கோடி ரூபாய் மதிப்பிலான பல்வேறு திட்டங்களை பிரதமர் துவக்கி வைத்தார். பின்னர் நடந்த பொது கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:-
குறுக்கு வழியில் அரசியல் செய்வது நாட்டை அழித்துவிடும். இந்தியாவில், பல குறுக்குவழிகள் உள்ளதால், குறுக்கு வழி அரசியலில் இருந்து தள்ளி நிற்க வேண்டும். நாட்டில், இந்த வகை அரசியல் மிகப்பெரிய சவாலாக மாறியுள்ளது. குறுக்கு வழி அரசியல் மூலம் ஓட்டுக்களை பெற முடியும். குறுக்கு வழியில் அரசியல் செய்பவர்கள், எப்போதும் விமான நிலையங்கள் அமைத்தது இல்லை. நவீன நெடுஞ்சாலைகள் அமைத்தது கிடையாது. எய்ம்ஸ் மருத்துவமனை அமைத்தது இல்லை. ஒவ்வொரு மாவட்டத்திலும் மருத்துவ கல்லூரிகள் துவங்க நடவடிக்கை எடுத்ததும் கிடையாது.
எங்கெல்லாம் புதிய பணிகளுக்கு அடிக்கல் நாட்டுகிறமோ, அந்த பணிகளை துவக்கி வைக்கும், நிர்வாக மாதிரியையும், அரசியல் கலாசாரம், வேலை கலாசாரத்தை பா.ஜ., அரசு கொண்டு வந்துள்ளது. தியோகரில், விமான நிலையம் அமைக்க அடிக்கல் நாட்ட வந்தேன். இன்று அதனை துவக்கி வைத்துள்ளேன். முன்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன. ஆனால், 2 அல்லது 3 அரசுகள் மாறிய பின்பு எந்த பணிகளும் நடக்கவில்லை.
இந்தியா ஆன்மிகம், பக்தி மற்றும் யாத்திரை தலங்களின் பூமி. யாத்திரைகள், நம்மை சிறந்த தேசமாகவும், சமுதாயமாகவும் மாற்றியுள்ளது. தியோகரில் ஜோதிர்லிங்காவும், சக்தீ பீடமும் உள்ளது. நீண்ட தூரங்களில் இருந்து லட்சகணக்கான மக்கள் தியோகார் நகருக்கு வருகின்றனர். இவ்வாறு மோடி பேசினார்.