இலங்கையில் வரும் 20-ம் தேதி புதிய அதிபர் தேர்வு?

இலங்கையில் வரும் 20-ம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கையில் நிலவும் பொருளாதார நெருக்கடி மற்றும் அத்தியாவசிய பொருட்களுக்கான தட்டுப்பாட்டால் கொதித்தெழுந்த மக்கள் அங்கு தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று முன்தினம் போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள், அதிபர் மாளிகையை கைப்பற்றினர். இலங்கை அதிபர் மாளிகையை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ள போராட்டக்காரர்கள் பலர் தற்போது அங்கேயே தங்கியுள்ளனர். இதனைத் தொடர்ந்து அனைத்துக் கட்சிகள் இணைந்து ஆட்சி அமைக்கும் வகையில் இலங்கை அமைச்சரவை ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளனர். மேலும் கொழும்பு ரத்மலானை விமானப்படை தளத்தில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தஞ்சமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்நிலையில், இலங்கையில் வரும் 20-ம் தேதி புதிய அதிபரை தேர்வு செய்ய அனைத்து கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. கோத்தபய ராஜபக்சே ஜூலை 13ம் தேதி பதவி விலகினால், அதிபர் பதவிக்கான வேட்புமனுக்கள் ஜூலை 19ம் தேதி ஏற்றுக்கொள்ளப்படும் என்றும் 20ம் தேதி புதிய அதிபர் தேர்வு செய்யப்படும் என்று கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்நிலையில் கோத்தபய ராஜபக்சே அதிபர் மாளிகையை விட்டு வெளியேறி ஓட்டம் பிடித்தார். கோத்தபய ராஜபக்சே கடற்படை முகாம் தளத்தில் தங்கியிருப்பதாக கூறப்பட்டு வந்த நிலையில், கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து வெளியேறிவிட்டதாகவும் இலங்கை அருகில் உள்ள ஒருநாட்டில் தங்கி இருப்பதாகவும் புதிய தகவல்கள் வெளியாகின. புதன்கிழமை கோத்தபய ராஜபக்சே நாடு திரும்புவார் என்றும் கூறப்பட்டது. ஆனால், இந்த தகவல்களை முற்றிலும் இலங்கை சபாநாயகர் மகிந்த யாப்பா மறுத்துள்ளார். இது குறித்து மகிந்த யாப்பா கூறும் பொழுது, “அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து வெளியேறியதாக வெளியான தகவல் உண்மையில்லை. கோத்தபய ராஜபக்சே இலங்கையில்தான் இருக்கிறார்”என்றார்.

இந்நிலையில் இலங்கைக்கு இந்தியா படைகளை அனுப்புவதாக வரும் தகவல்கள் குறித்து இந்திய தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. இலங்கையில் தற்போது ஏற்பட்டிருக்கும் அரசியல் நெருக்கடி மற்றும் மக்கள் புரட்சி போன்றவற்றை கையாள வசதியாக, அந்நாட்டுக்கு இந்தியா படைகளை அனுப்புவதாக வந்த தகவல்கள் உண்மையில்லை என்று கொழும்புவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.