அதிமுக எம்எல்ஏக்கள் ஆலோசனைக் கூட்டம் ஜூலை 17ம் தேதி கூடும் என்று தலைமை கழகம் அறிவித்துள்ளது.
அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் பூதாகரமான நிலையில் கடந்த 11ஆம் தேதி நடைபெற்ற பொதுக் குழுவில் எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டார். பொதுக்குழு உறுப்பினர்களின் கோரிக்கையை ஏற்று கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருந்து வந்த ஓ.பன்னீர்செல்வம், அடிப்படை உறுப்பினர் உள்ள அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதை ஏற்க மறுத்துள்ள ஓ.பன்னீர் செல்வம் தான் அதிமுகவில் இருந்து எடப்பாடி பழனிச்சாமி, கே.பி முனுசாமியை நீக்குவதாக அறிவித்தார். தன்னை நீக்கியது செல்லாது என்று கூறி தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளார். அதிமுக அலுவலகத்திற்கு வைக்கப்பட்டுள்ள சீலை நீக்கக் கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
குடியரசு தலைவர் தேர்தல் தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி இல்லத்தில் ஜூலை 17ம் தேதி ஆலோசனைக் கூட்டம் நடைபெறும் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இடைக்கால பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர் முதன்முறையாக அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டம் அவரது இல்லத்தில் கூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வருகிற 18-ஆம் தேதி குடியரசுத் தலைவர் தேர்தல் நடைபெறும் நிலையில் அதிமுக பாஜக வேட்பாளர் திரவுபதி முர்முவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது. இந்த சூழலில் குடியரசுத் தலைவர் தேர்தல் குறித்து எம்எல்ஏக்களுடன் ஆலோசனை நடத்தப்படவுள்ளதாக எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார்.
இதனிடையே அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ள ஒ.பன்னீர் செல்வம் எம்எல்ஏவாக இருக்கிறார். எதிர்கட்சி துணைத்தலைவராகவும் இருக்கிறார். அன்றைய தினம் நடைபெறும் கூட்டத்தில் எதிர்கட்சி துணைத்தலைவர் பதவியில் இருந்து ஓ.பன்னீர் செல்வத்தை நீக்குவது குறித்தும் ஆலோசனை நடைபெறும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
இதனிடைய தமிழக சட்டசபை சபாநாயகருக்கு ஓ. பன்னீர் செல்வம் கடிதம் எழுதியுள்ளார். அதிமுக சட்டமன்ற குழுவை மாற்றி அமைக்கும்படி மனுக்கள் வந்தால் அவற்றை நிராகரிக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக நீதிமன்றத்திலும், தேர்தல் ஆணையத்திலும் வழக்குகள் நிலுவையில் இருப்பதால் மனுக்களை நிராகரிக்க வேண்டும் என்று எழுதியுள்ளார். ஓ.பன்னீர் செல்வத்தின் எதிர்கட்சி துணைத்தலைவர் பதவி நீடிக்குமா என இன்னும் சில நாட்களில் தெரியவரும்.