78 வருடங்களுக்கு மேலாக இலங்கை நாட்டை சோழ மன்னர்கள் ஆண்டார்கள்: பொன்.மாணிக்கவேல்

78 வருடங்களுக்கு மேலாக இலங்கை நாட்டை சோழ மன்னர்கள் ஆண்டார்கள் என்பதற்காக வாழும் நினைவு தூணாக, உத்தம சோளீஸ்வர உடைய மகாதேவர் சிவன் கோயிலில் உள்ள கருங்கல் தூண் இருந்து வருகிறது என்று, முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல் கூறியுள்ளார்.

தமிழக சிலை கடத்தல் தடுப்பு பிரிவு போலீஸ் முன்னாள் ஐ.ஜி. பொன்.மாணிக்கவேல், மத்திய-மாநில அரசுகளுக்கு அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:-

இலங்கை நாட்டில் கல்பேட்கொரேளே என்ற நகரத்தின் அருகே அமைந்துள்ளது எடகடேய் கிராமம். இந்த கிராமத்தில் ராஜராஜ சோழன் 1009 வருடத்திற்கு முன்பு கட்டிய உத்தம சோளீஸ்வரன் உடைய மகாதேவர் கோயில் கேட்பாரற்று கிடக்கிறது. கடந்த 1912-ம் ஆண்டு ஐரோப்பிய கிறிஸ்துவ கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டுபிடித்து அது குறித்த தகவல் அனைத்தையும் அப்போதைய பிரிட்டிஷ் அரசாங்கத்துக்கு தெரிவிக்காமல் சென்றுள்ளனர். இதன் பிறகு கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக வரலாற்று பொக்கிஷம் நிறைந்த இந்த தகவல் எதையும் தெரிந்து கொள்ளாமல் இந்திய தொல்லியல் துறை மற்றும் கலாச்சாரத் துறை உள்ளது.

இலங்கையில் ராஜராஜ சோழன் கட்டிய உத்தம சோளீஸ்வரர் உடைய மகாதேவர் கோயிலில் மிகப்பெரிய கருங்கல் தூண் ஒன்று உள்ளது. இந்த கல் தூணில் தமிழில் பழமையான வட்ட எழுத்துக்களில், ராஜராஜ சோழன் 78 ஆண்டு காலம் இலங்கையை ஆட்சி செய்தார் என்று குறிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இலங்கை நாட்டின் அப்போதைய பெயர் சிம்ஹாலா என்று இருந்ததை மாற்றிவிட்டு, அந்த நாட்டிற்கு நிகரி சோழமண்டலம் என பெயரிட்டதும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. மேலும் சிம்ஹாலாவின் தலைநகரமான அனுராதபுரத்தை எரித்து தீக்கிரையாக்கி விட்டு ஜனநாத மங்கலம் என்ற புதிய தலை நகரத்தை ராஜராஜ சோழன் நிறுவியதும் குறிப்பிடபட்டுள்ளது. மேலும் மூன்று வேலி (21 ஏக்கர் நிலம்) இந்தக் கோவிலுக்கு தானமாக அளிக்கப்பட்டு அதில் வரும் வருமானத்தை வைத்து பராமரிக்க வேண்டும் எனவும் அந்த கல்வெட்டில் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

78 வருடங்களுக்கு மேலாக இலங்கை நாட்டை சோழ மன்னர்கள் ஆண்டார்கள் என்பதற்காக வாழும் நினைவு தூணாக, உத்தம சோளீஸ்வர உடைய மகாதேவர் சிவன் கோயிலில் உள்ள கருங்கல் தூண் இருந்து வருகிறது. இதுபற்றி இந்திய தொல்லியல் துறைக்கும் கலாச்சார அமைச்சகத்துக்கும் இதுவரை தகவல் தெரியவில்லை. வெளி நாட்டில் இருந்து கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் இதை கண்டுபிடித்துள்ளேன். இவாறு அந்த கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.