எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக கவர்னர் பேசகூடாது: கி.வீரமணி

சட்டப்படி எடுத்துக்கொண்ட உறுதிமொழிக்கு எதிராக கவர்னர் பேசகூடாது என்று, திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி கூறியுள்ளார்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

கவர்னர் ஆர்.என்.ரவி தொடர்ந்து, தனது பதவியின் மாண்புக்கும், மரியாதைக்கும் இழுக்கும் தேடிடும் வகையில் பிரச்சினைக்குரியதாக கருதப்படும் கொள்கைகளை பற்றி விமர்சனம் செய்வது அரசமைப்பு சட்டப்படி அவர் எடுத்த உறுதிமொழிக்கு எதிரானது. அவருடைய அதிகார வரம்பின் அத்துகளை மீறிய நடவடிக்கை என்பதால் கண்டனத்துக்குரியதாகும். ஒரு கவர்னரின் வேலை, அந்த மாநில அரசு திராவிட மாடல் அரசு என்று கூறும்போது, அதற்கு நேர் எதிரான கருத்தை கூறி உள்ளே ஓர் அமைதியற்ற விவகாரத்தை கிளப்பி விடுவதாக உள்ளது. ஏதோ ஒரு உள்ளார்ந்த திட்டத்துடன் இப்படி வலிந்த வம்புகள் தொடங்கப்படுகின்றனவா? என்ற சந்தேகமும் பரவலாக இருக்கிறது.

அதை தவிர்த்து, சுமுக உறவுடன் மாநில வளர்ச்சிக்கு, வேலி துணையாக இருக்க வேண்டுமே தவிர, வேலியே பயிரை மேய்வதாக இருப்பது கூடாது. இந்திய அரசமைப்பு சட்ட விதிக்கும், எடுத்த உறுதிமொழிக்கும் அவரது பதவியின் பெருமைக்கும் கூட அது விரோதமானது ஆகும். இவ்வாறு அதில் அவர் கூறியுள்ளார்.