இலங்கை ஜனாதிபதி பதவியில் இருந்து விலகும் கோத்தபாய ராஜபக்சே, மாலத்தீவுக்கு தப்பி ஓடிவிட்டதாக அந்நாட்டின் பிரதமர் அலுவலகம் மற்றும் விமானப் படை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
இலங்கையில், கடந்த 9-ந் தேதி அதிபர் மாளிகைக்குள் போராட்டக்காரர்கள் புகுந்து சூறையாடினர். போராட்டக்காரர்கள் வருவதற்கு முன்பு அதிபர் கோத்தபய ராஜபக்சே அங்கிருந்து வெளியேறினார். அவர் நாட்டை விட்டு தப்பி விட்டதாக தகவல் வெளியானது. ஆனால், கோத்தபய இலங்கையில்தான் இருப்பதாக சபாநாயகர் தெரிவித்தார். இதனிடையே, அதிபர் கோத்தபய ராஜபக்சே இன்று ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார். இந்நிலையில், அதிபர் கோத்தபய ராஜபக்சே இலங்கையில் இருந்து தப்பிச்சென்றுவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஜூலை 13-ந் தேதிக்குள் ராஜினாமா செய்வதாக கோத்தபாய ராஜபக்சே அறிவித்த போதும் கிளர்ச்சியாளர்களிடையே நம்பிக்கை ஏற்படாமல் இருந்தது. இதனால் இன்று பகல் 1 மணிக்குள் கோத்தபாய ராஜபக்சே ராஜினாமா செய்தாக வேண்டும் எனவும் கெடு விதிக்கப்பட்டது. இந்நிலையில் நேற்று முதலே கோத்தபாய ராஜபக்சே நாட்டைவிட்டு தப்பி ஓட முயற்சிக்கிறார் என தகவல்கள் வெளியாகின. முதலில் அமெரிக்காவின் கலிபோர்னியா செல்ல விசா கேட்டிருந்தார் கோத்தபாய; ஆனால் அமெரிக்காவோ விசா வழங்க மறுத்துவிட்டது என தகவல்கள் வெளியாகின. பின்னர் குடும்பத்தினர் 15 பேருடன் தென்னிந்தியா செல்ல கோத்தபாய ராஜபக்சே முயற்சித்தார்; ஆனால் இந்திய அரசு அனுமதி தரவில்லை எனவும் கூறப்பட்டது. மேலும் இலங்கை விமான படை தலைமை தளபதி வீட்டில்தான் கோத்தபாய பதுங்கி கிடக்கிறார் எனவும் கூறப்பட்டது. ஆனால் இதனை நேற்று விமானப் படை திட்டவட்டமாக மறுத்திருந்தது.
இந்நிலையில் இன்று அதிகாலை 3 மணிக்கு கோத்தபாய ராஜபக்சே, மாலத்தீவு நாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இதனை இலங்கை பிரதமர் அலுவலகம், விமானப் படை தலைமயகம் இரண்டுமே உறுதி செய்துள்ளன. இது தொடர்பாக இலங்கை விமானப் படை வெளியிட்டுள்ள அறிக்கையில், அரசியலமைப்பில் நிறைவேற்று ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு ஏற்ப தற்போதைய அரசாங்கத்தின் வேண்டுகோளின் அடிப்படையில், பாதுகாப்பு அமைச்சின் அங்கீகாரத்தின் கீழ் கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலுள்ள குடிவரவு மற்றும் குடியகல்வு, சுங்க மற்றும் ஏனைய அனைத்து சட்டங்களுக்கு உட்பட்டு ஜனாதிபதி, அவரது மனைவி மற்றும் இரு மெய்ப்பாதுகாவலர்களுடன் மாலைதீவிற்கு புறப்படுவதற்காக விமானம் வழங்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.