நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன? என்பதை தமிழக அரசும், ஆளுனர் மாளிகையும் தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்க வேண்டும் என்று, டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு சட்டப்பேரவையில் கடந்த பிப்ரவரி 8-ந்தேதி இரண்டாவது முறையாக நிறைவேற்றி அனுப்பப்பட்ட நீட் விலக்கு சட்டத்தின் தற்போதைய நிலை குறித்து தகவல் பெறும் உரிமை சட்டத்தின் கீழ் எழுப்பப்பட்ட வினாக்களுக்கு நேரடியாக பதில் அளிக்க ஆளுனர் மாளிகை மறுத்திருக்கிறது. இது நியாயமல்ல. நீட் விலக்கு சட்டம் உரிய அதிகார நிலையில் உள்ளவரால், தொடர் பரிசீலனைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது என ஆளுனர் மாளிகை கூறியுள்ளது. உரிய அதிகார நிலையில் உள்ளவர் ஆளுனரா? மத்திய அரசா? குடியரசுத் தலைவரா? என்பதை ஆளுனர் மாளிகை தெரிவிக்கவில்லை.
நீட் விலக்கு சட்டம் மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டு விட்டது என ஆளுனர் மாளிகை தெரிவித்ததாக மே 4-ந்தேதி முதல்-அமைச்சர் சட்டப்பேரவையில் அறிவித்தார். ஆனால், ஆளுனர் மாளிகை இப்போது அளித்துள்ள பதில், நீட் விலக்கு சட்டம் இன்னும் ஆளுனர் மாளிகையில் தான் உள்ளதோ? என்ற ஐயத்தை ஏற்படுத்துகிறது. தமிழ்நாட்டு மாணவர்களின் நலன் சார்ந்த விவகாரத்தில் ஆளுனர் மாளிகை கூடுதல் அக்கறை மற்றும் பொறுப்புடன் செயல்பட வேண்டும். நீட் விலக்கு சட்டத்தின் இன்றைய நிலை என்ன? என்பதை தமிழக அரசும், ஆளுனர் மாளிகையும் தமிழ்நாட்டு மக்களுக்கு உடனடியாக விளக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.