விசா மோசடியில் கார்த்திக் சிதம்பரத்திற்கு தொடர்பு: அமலாக்கத் துறை

பணம் வாங்கி, சீனாவைச் சேர்ந்தவர்களுக்கு சட்டவிரோதமாக ‘விசா’ பெற்றுத் தந்த வழக்கில் காங்கிரஸ் எம்.பி., கார்த்திக்கு தொடர்பு உள்ளது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது என, டெல்லி உயர் நீதிமன்றத்தில் அமலாக்கத் துறை தெரிவித்துள்ளது.

காங்கிரஸ் மூத்த தலைவர் சிதம்பரம், மத்திய உள்துறை அமைச்சராக இருந்தபோது, 2011ல், சீனாவைச் சேர்ந்த, 263 பேருக்கு சட்டவிரோதமாக விசா வழங்கப்பட்டது தொடர்பாக சமீபத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதற்காக, சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை தொகுதி லோக்சபா எம்.பி.,யுமான கார்த்தி 50 லட்சம் ரூபாய் வாங்கியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக அமலாக்கத் துறை விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் முன்ஜாமின் கேட்டு, டெல்லி உயர் நீதிமன்றத்தில் கார்த்தி மனு தாக்கல் செய்துள்ளார். நேற்று நடந்த விசாரணையின்போது, அமலாக்கத் துறை சார்பில் கூறப்பட்டதாவது:-

இந்த விவகாரம், நாட்டின் பாதுகாப்பு மற்றும் பொருளாதாரத்துடன் தொடர்புடையது. இதுவரை நடந்த விசாரணையில், கார்த்திக்கு மோசடியில் தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது. விசாரணை தற்போது முதல்கட்டத்தில் உள்ளதால், முழு விபரங்களை தெரியபடுத்த முடியாது. எம்.பி.,யாக உள்ள கார்த்தி தன் அதிகாரத்தை பயன்படுத்தி சாட்சிகளையும், ஆதாரங்களையும் கலைக்க வாய்ப்புள்ளது. அவர் மீது ஏற்கனவே பல மோசடி வழக்குகள் உள்ளன. அவர் வெளிநாடு தப்பிச் செல்லவும் வாய்ப்பு உள்ளது. அதனால் முன்ஜாமின் வழங்கக் கூடாது. இவ்வாறு கூறப்பட்டது.

வழக்கை, ஆக., 18ம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது. அதுவரை கைது நடவடிக்கை இருக்காது என, அமலாக்கத் துறை சார்பில் நேற்று தெரிவிக்கப்பட்டது.