ஆரியர்கள், திராவிடர்கள் என்பதை ஆங்கிலேயர்கள்தான் உருவாக்கினார்கள் என்பதை அருங்காட்சியகங்கள் வழியாக தெரிந்து கொள்ளலாம் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கூறினார்.
மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தின் 54வது பட்டமளிப்பு விழா, பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள மு.வரதராசனார் அரங்கத்தில் தமிழக ஆளுநர் ஆர்என் ரவி தலைமையில் நடைபெற்றது. இதில் கௌரவ விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் முதன்மை விருந்தினராக இந்திய அறிவியல் கழக நிறுவன முன்னாள் இயக்குநர் பலராம் மற்றும் பல்கலைக்கழக துணைவேந்தர் குமார் ஆகியோர் பங்கேற்றனர். விழாவில் கலந்துகொண்ட தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் கடந்த 2019-20 மற்றும் 2020-21 ஆகிய கல்வி ஆண்டுகளில் முனைவர் பட்டம் பெற்ற 1,048 நபர்களுக்கு பதக்கங்கள் மற்றும் பட்டங்களை வழங்கி பாராட்டுதல்களை தெரிவித்தார். இதனை தொடர்ந்து பல்கலைக்கழகத்தில் பயின்ற 1லட்சத்தி 33ஆயிரத்தி 91 நபர்களுக்கு பட்டம் வழங்கப்பட்டது. பட்டமளிப்பு விழாவில் ஆளுநர் ஆர்.என். ரவி பேசியதாவது:-
இந்த பல்கலைக்கழகம் பாரதரத்னா காமராசர் பெயரால் இயங்கி வருகிறது. காமராசர் இந்திய நாட்டிற்கும், தமிழ்நாட்டிற்கும் பல்வேறு திட்டங்களை செய்து உள்ளார். நாம் அதை நினைவில் கொள்ள வேண்டும். அவர் சிறந்த தேசியவாதி. எளிய பின்புலத்தில் இருந்து வந்தவர். அவர் நம் அனைவருக்கும் ஓர் முன்மாதிரியாக திகழ்கிறார்.
ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்வு காமராசரை சுதந்திர போராட்டத்தை நோக்கி உந்தித்தள்ளியது. அப்போது அவருக்கு 17வயதுதான். ஆங்கிலேயர்கள் 1905 ஆம் ஆண்டு இந்த நாட்டை சமூக ரீதியாக, மத ரீதியாக,சாதி ரீதியாக, பிளவுபடுத்தினர். அந்த நிகழ்வு வ.உ.சிதம்பரம்பிள்ளை, மகாகவி பாரதியார் போன்றோரை சுதந்திர போராட்டத்தில் இறங்கச் செய்தது. 1600களில் ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு தொழில் செய்ய வந்தனர். பின்னாளில் அவர்கள் நாட்டை கைப்பற்ற முயற்சி செய்தனர்.
வட அமெரிக்கவில், நோய்களை பரப்பியும், படுகொலைகளை நிகழ்த்தியும் அந்நாட்டை ஆங்கிலேயர்கள் கைபற்றினர். அதேபோல் இங்கே செய்துவிடலாம் என நினைத்தனர். ஆனால், இந்தியா பொருளாதாரத்திலும் மக்கள் தொகையிலும் முன்னேறி இருந்தனர். 1750ல் உலக அளவில் உற்பத்தித் துறையில் இந்தியா மற்றும் சீனா 73% பங்கு கொண்டிருந்தன. இதில் இந்தியா மட்டுன் 40% உற்பத்தி திறனுடன் இருந்தது. வட அமெரிக்கவை போல இந்தியாவை அழிக்க முடியாது என உணர்ந்த ஆங்கிலேயர்கள் இந்திய மக்களை ஒற்றுமையை சீர்குலைக்க முடிவு செய்தனர்.
தண்ணீர் புகா வண்ணம் கப்பலின் அடிப்பாகத்தை எப்படி வடிவமைப்பது என சோழர்களிடமிருந்து ஆங்கிலேயர்கள் கற்றுக் கொண்டனர். அதனை தொடர்ந்து தொழில் முறை கல்வி என ஒவ்வொன்றாக அழிக்கத் தொடங்கினர். சுதந்திரப் போராட்டம் துவங்கியபோது வடகிழக்கு மக்களை இந்தியர்கள் இல்லை என்று கதைகளை கூறி சதி செய்தனர். அதேபோல் ஒவ்வொரு பகுதிகளுக்கும் ஒவ்வொரு கதையை ஆங்கிலேயர்கள் உருவாகினார்கள். இந்தியாவை கிழக்கு, மேற்கு, வடக்கு, தெற்கு என பிரித்தனர். பின் வடக்கு ஆரியர்கள், தென்பகுதி திராவிடர்கள் எனக்கூறி அதையும் பஞ்ச ஆரியர்கள், திராவிடர்கள் என பிரித்து சுந்திரப் போராட்டத்தை நீர்த்து போக முயற்சி செய்தனர்.
மீண்டும் சுதந்திர போராட்டம் துவங்கியபோது பிரித்தாலும் சூழ்ச்சியை ஆங்கிலேயர்கள் பயன்படுத்தினார்கள் அதை அனைவரும் அங்காட்சியகங்களில் உள்ள பதிவுகள் வழியாக படித்து அறிந்து கொள்ள வேண்டும். இந்தியாவில் உள்ள மாநிலங்களை தனித்தனியாக பிரித்துப் பார்க்காமல் ஒரே குடும்பமாக பார்த்தால்தான் இந்தியா ஒருங்கிணைந்த வளர்ச்சியை எட்ட முடியும். இவ்வாறு ஆளுநகர் ஆர்.என்.ரவி பேசினார்.