இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருவதாக ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஐ.நா.பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டரெஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியுள்ளதாவது:-
நான் இலங்கையின் நிலைமையை தொடர்ந்து கவனித்து வருகிறேன். மோதலுக்கான அடிப்படைக் காரணங்கள் மற்றும் எதிர்ப்பாளர்களின் குறைகளை நிவர்த்தி செய்வது முக்கியமானதாகும். அமைதியான மற்றும் ஜனநாயக மாற்றத்திற்கான சமரச மனப்பான்மையை ஏற்றுக்கொள்ளுமாறு அனைத்துக் கட்சித் தலைவர்களையும் நான் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று மாலத்தீவு தப்பிச் சென்ற கோத்தபய ராஜபக்சே அங்கு எதிர்ப்பு கிளம்பியதால், இன்று சிங்கப்பூர் செல்வதாக தகவல் வெளியானது. இந்நிலையில், மாலத்தீவில் இருந்து தனியார் ஜெட் விமானம் மூலம் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூர் புறப்பட்டுள்ளார். மாலத்தீவிலும் கோத்தபய ராஜபக்சேவுக்கு எதிர்ப்பு கிளம்பிய நிலையில் சிங்கப்பூர் புறப்பட்டு சென்றுள்ளார். தொடர்ந்து, அதிபர் கோத்தபய ராஜபக்சே சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியா செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
கோத்தபய ராஜபக்சே தனது மனைவியுடன் சவுதி ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் எஸ்.வி.788 ரக விமானத்தில் இன்று காலை 11.30 மணியளவில் புறப்பட்டு உள்ளார். அவர்கள் இன்று இரவு 7 மணியளவில் சிங்கப்பூர் சென்றடைய உள்ளனர் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவர்கள் இருவரும் சிங்கப்பூரிலேயே தங்குகின்றனர் என்றும் ஜெட்டாவுக்கு செல்லவில்லை என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அவர்கள் இருவரும் சிங்கப்பூரில் இருந்து சவுதி அரேபியாவில் உள்ள ஜெட்டா நகருக்கு செல்ல இருக்கின்றனர் என மாலத்தீவு அரசு அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர் என பத்திரிகை தகவல்கள் முதலில் தெரிவித்தன. எனினும், இதற்கு தற்போது மறுப்பு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இலங்கையில் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவர இன்று மதியம் 12 மணி முதல் நாளை மாலை 5 மணிவரை தலைநகர் கொழும்புவில் ஊரடங்கை அமல்படுத்தி இலங்கை அரசு உத்தரவிட்டுள்ளது. இலங்கையில் சட்டம் மற்றும் ஒழுங்கை மீண்டும் கொண்டு வர தேவையான என்ன நடவடிக்கையை எடுக்க வேண்டுமோ அதனை செய்யும்படி ராணுவம் மற்றும் போலீசாருக்கு ரணில் விக்ரமசிங்கே உத்தரவிட்டு உள்ளார். இதன்படி, கவச வாகனங்களில் ராணுவ வீரர்கள் கொழும்பு நகரின் முக்கிய பகுதிகளில் இன்று வலம் வருகின்றனர்.
இந்நிலையில் இலங்கையில் பொருளாதார வீழ்ச்சியால் போராட்டம் வெடித்துள்ள நிலையில், இலங்கைக்கான அவசியமற்ற பயணங்களைத் தவிர்க்குமாறு இங்கிலாந்து, சிங்கப்பூர் மற்றும் பஹ்ரைன் ஆகிய நாடுகள் தனது குடிமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளன.