அதிமுக அலுவலகம் சீல்: தீர்ப்பை ஒத்திவைத்த சென்னை உயர்நீதிமன்றம்!

அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்ட வழக்கின் தீர்ப்பை சென்னை உயர்நீதிமன்றம் ஒத்திவைத்துள்ளது.

ஜூலை 11ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்தில் ஓபிஎஸ் – இபிஎஸ் ஆதரவாளர்களுக்கு இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது. அதிமுக அலுவலகத்தை ஓ பன்னீர்செல்வம் கைப்பற்றியதோடு, சில முக்கிய ஆவணங்களையும் எடுத்து சென்றதாக கூறப்படுகிறது. அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து சட்டம் – ஒழுங்கு பிரச்னையை காரணம் காட்டி கட்சி அலுவலகத்துக்கு சீல் வைத்து வருவாய் கோட்டாட்சியர் உத்தரவு பிறப்பித்தார். இதனைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சீல் வைக்கப்பட்டதை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், ஒருங்கிணைப்பாளர் எனக் கூறி பன்னீர்செல்வமும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர். இந்த இரு வழக்குகளும் நீதிபதி சதீஷ்குமார் முன் விசாரணைக்கு வந்தது. இதில் ஓபிஎஸ் – இபிஎஸ் தரப்பில் வாதங்கள் முன்வைக்கப்பட்ட நிலையில், வன்முறை தொடர்பாக காவல்துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

இந்த நிலையில் இந்த வழக்கின் விசாரணை மீண்டும் தொடங்கியுள்ளது. இதன்பின்னர் அதிமுக தலைமை அலுவலகத்தில் ஏற்பட்ட வன்முறை தொடர்பாக காவல்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதேபோல் வன்முறை தொடர்பாக வீடியோ மற்றும் புகைப்படங்கள் அடங்கிய ஆதாரங்களும் சமர்பிக்கப்பட்டது. இதனைப் பார்த்த நீதிபதி சதீஷ் குமார், அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சம்மந்தப்பட்ட தரப்பினர் செல்லும் போது காவல்துறையினர் அமைதியாக இருந்தது ஏன் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு காவல்துறை தரப்பில், பாதுகாப்பு பணியில் போலீசார் ஈடுபட்டதால் மட்டுமே பொதுமக்கள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று பதிலளிக்கப்பட்டது.

தொடர்ந்து தொலைக்காட்சிகளில் காட்டப்பட்ட வீடியோக்களில் 10 சதவிகிதம் கூட வீடியோ ஆதாரங்களில் சமர்பிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் கருத்து கூறினர். இதனைத்தொடர்ந்து அதிமுக தலைமை அலுவலகத்திற்கு ஏன் சீல் வைக்கப்பட்டது என்று கேள்வி எழுப்பினர். இதற்கு காவல்துறை தரப்பில், பொது அமைதிக்கு குந்தகம் ஏற்பட்டதால் அதிமுக தலைமை அலுவலகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. மேற்கொண்டு இரு தரப்பில் எந்த மோதலில் இல்லை என்று உத்தரவாதம் அளிக்கப்படவில்லை. இதனால் சீல் வைக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்தால் மேலும் பிரச்னை ஏற்படலாம். அதிமுக தலைமை அலுவலக வன்முறையால் பொது சொத்துகளுக்கு ஏற்பட்ட சேதங்களுக்கான இழப்பீட்டை சம்மந்தப்பட்டவர்களிடம் வசூலிப்போம் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனைத்தொடர்ந்து ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர், பெரும்பான்மையான நிர்வாகிகளின் ஆதரவு இபிஎஸ்-க்கு இருப்பதால், அனைவரும் அவர் பக்கம் இருப்பதாக கருத முடியாது. அலுவலக விசாரணை தொடர்பான விசாரணையில் எனது பதவியை தீர்மானிக்க முடியாது. இதனால் இரு தரப்பும் இடையிலான சர்ச்சையை நீதிமன்றம் மட்டுமே தீர்க்க வேண்டும் என்று வாதிடப்பட்டது. தொடர்ந்து மூன்று தரப்பின் வாதங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்படுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.