தேயிலைத் தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கை. தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்தொழிக்கும் செயலில் திமுக அரசு தொடர்ந்து ஈடுபடுவது வன்மையான கண்டனத்திற்குரியது என்று, சீமான் கூறியுள்ளார்.
நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகத்திற்கு சொந்தமான தேயிலைத் தோட்டங்களை வனத்துறையிடம் ஒப்படைக்கும் வகையில் தமிழ்நாடு அரசு தொடர் நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவது பெரும் அதிர்ச்சியளிக்கிறது. பல்லாயிரக்கணக்கான தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்தொழிக்கும் செயலில் தி.மு.க. அரசு தொடர்ந்து ஈடுபடுவது வன்மையான கண்டனத்திற்குரியது.
1964-ம் ஆண்டுச் சிறிமாவோ-சாஸ்திரி ஒப்பந்தப்படி இலங்கையிலிருந்து இந்தியா திரும்பிய மலையகத் தமிழர்களுக்கு மறுவாழ்வு அளிக்கும் நோக்குடன், வனத்துறையிடமிருந்து நிலங்களைப் பெற்று தமிழ்நாடு தேயிலைத் தோட்ட கழகம் தமிழ்நாடு அரசால் உருவாக்கப்பட்டது. ஆனால், அங்குப் பணிபுரியும் தேயிலை தொழிலாளர்களுக்கு முறையான குடியிருப்பு, குடிநீர், மின்சாரம், கழிவறை, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளைகூட ஏற்படுத்தித்தராததோடு, உயர்கல்வி முடித்த தேயிலைத் தொழிலாளர்களின் பிள்ளைகளுக்கு தகுதியின் அடிப்படையில் வேலை வாய்ப்பைக்கூட ‘TANTEA’ நிறுவனம் இதுவரை வழங்கவில்லை என்பது பெருங்கொடுமையாகும்.
அதுமட்டுமின்றி மற்ற தனியார் தேயிலைத் தோட்டத் தொழிலாளர்களுக்கு வழங்கப்படுவதைவிட மிகக்குறைந்த தொகையாக நாளொன்றுக்கு 345 ரூபாய் மட்டுமே ஊதியமாக வழங்கப்படுவதும் மிகுந்த வேதனைக்குரியதாகும். எனவே, தமிழ்நாடு அரசு, பல்லாயிரக்கணக்கான தேயிலைத் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தைப் பாதுகாக்கும் வகையில் நிறுவனத்தை வனத்துறைக்கு ஒப்படைக்கும் திட்டத்தைக் கைவிட்டு, குத்தகை ஒப்பந்தத்தை உடனடியாகப் புதுப்பிக்க வேண்டுமெனக் கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.