அனைவரையும் ஒன்றிணைத்து பழைய அதிமுகவாக இருக்க வேண்டும்: சசிகலா

ஓபிஎஸ்ஸோடு இணைந்து செயல்படுவீர்களா என்ற கேள்விக்கு, அனைவரையும் ஒன்றிணைத்து பழைய அதிமுகவாக இருக்க வேண்டும் என்று சசிகலா பதிலளித்துள்ளார்.

அதிமுக உட்கட்சி மோதல் வலுத்து வரும் நிலையில் ஓபிஎஸ், இபிஎஸ் இரு அணிகளாக பிரிந்து செயல்பட்டு வருகின்றனர். இவரது ஆதரவாளர்களை அவர் நீக்குவதும், அவரது ஆதரவாளர்களை இவர் நீக்குவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. அதிமுக வங்கி கணக்கை பயன்பத்த்துவது தொடர்பாகவும் சர்ச்சை நீடித்து வருகிறது. அதிமுக அலுவலகம் சீல் வைக்கப்பட்டுள்ள நிலையில் அது தொடர்பான வழக்கும் நடைபெற்று வருகிறது. இது ஒருபுறமிருக்க சசிகலாவோ நான் தான் அதிமுகவின் பொதுச் செயலாளர் என சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறார்.

இந்நிலையில் தஞ்சாவூர் சென்றுவிட்டு சென்னை திரும்பிய சசிகலா நேற்று தியாகராயர் நகர், அபிபுல்லா சாலையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

அதிமுகவில் தலைவர்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் தான் தவறான நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இதனால் தான் தொண்டர்கள் மத்தியில் தற்போது கவலை ஏற்பட்டிருக்கிறது. அதிமுக மூத்த நிர்வாகிகளின் ஒருவரான பொன்னையன் பேசியதாக ஆடியோ ஒன்று சமூக வலைத்தளங்களின் பரவி பெரும் சர்ச்சை ஏற்படுத்தி இருக்கிறது. யார் பேசினார்களோ அவர்கள் அங்கிருந்து தானே பேசுகிறார்கள், அவர்களுக்கும் ஒரு கருத்து தெரிந்திருக்கலாம், தெரிந்தும் கூட சொல்லி இருக்கலாம். பார்க்கும் மக்களுக்கு தெரிந்திருக்கும் அது யாருடைய குரல் என்று. இவ்வாறு அவர் கூறினார்.

ஓ.பன்னீர்செல்வம் உங்களுடன் இணைந்தால் ஏற்றுக்கொள்வீர்களா என்ற கேள்விக்கு பதில் அளித்த சசிகலா, “கட்சியில் உள்ளவர்கள் அனைவரையும் ஒன்றிணைத்து பழைய அதிமுகவாக இருக்க வேண்டும். வரும் காலங்களில் வெற்றிகளை பெற வேண்டும். கட்சியை மீட்டெடுக்க அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுத்துக் கொண்டுதான் இருக்கிறேன். நான் பழைய பழனிச்சாமி இல்லை என ஈபிஎஸ் மிரட்டும் தோனியில் பேசியுள்ளார். பழைய பழனிசாமி இல்லை என்று சொல்பவர்களுக்கு தான் அதில் என்ன இருக்கிறது என தெரியும்” என்று கூறினார்.