இலங்கையின் முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சே, அவரது சகோதரர் பசில் ராஜபக்சே ஆகியோர் இலங்கையைவிட்டு தப்பி ஓடுவதற்கு அந்நாட்டு உச்சநீதிமன்றம் அதிரடியாக தடை விதித்துள்ளது.
இலங்கையில் பொருளாதாரப் பேரழிவால் ராஜபக்சேக்களுக்கு எதிராக மக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிய கோத்தபாய ராஜபக்சே, வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டார். இலங்கையில் இருந்து மாலத்தீவுக்கு தப்பி ஓடிய கோத்தபாய ராஜபக்சே, அங்கிருந்து சிங்கப்பூருக்கு ஓடினார்.
மற்றொரு ராஜபக்சே சகோதரர்களில் ஒருவரான பசில் ராஜபக்சே, ஏற்கனவே இலங்கையை விட்டு தப்பி ஓட முயன்றார். ஆனால் விமான நிலையத்திலேயே பொதுமக்களாள் தடுத்து நிறுத்தப்பட்டு வீட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார். இருப்பினும் அமெரிக்கா குடியுரிமை பெற்றவர் என்பதால் பசில் ராஜபக்சே, தப்பி ஓடிவிட்டதாகவும் ஒரு சில செய்திகள் தெரிவிக்கின்றன. அதேபோல மகிந்த ராஜபக்சே, பிரதமர் பதவியில் இருந்து விலகி உயிருக்கு பயந்து இலங்கை திருகோணமலை கடற்படை முகாமில் பதுங்கி இருந்தார். பின்னர் மாலத்தீவில் ஒளிந்து இருந்துவிட்டு இலங்கைக்கே திரும்பினார்.
இந்நிலையில் மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே உள்ளிட்டோர் இலங்கையைவிட்டு வெளியேற தடை கோரி அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த நிலையில் தங்களுக்கு எதிரான இந்த வழக்கு விசாரிக்கப்படும் வரை தாங்கள் நாட்டை விட்டு வெளியேறமாட்டோம் என ராஜபக்சே சகோதரர்கள் இருவரும் சுப்ரீம் கோர்ட்டில் உறுதியளித்துள்ளனர். இவ்வழக்கை விசாரித்த இலங்கை உச்சநீதிமன்றம், ஜூலை 28-ந் தேதி வரை மகிந்த ராஜபக்சே, பசில் ராஜபக்சே ஆகியோர் நீதிமன்ற அனுமதி இல்லாமல் வெளிநாடு செல்ல இன்று தடை விதித்து உத்தரவிட்டது.