பாதாமியில் இருதரப்பினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் காயம் அடைந்தனர். இந்த நிலையில் சித்தராமையா கொடுத்த நிவாரண உதவி தொகை ரூ.2 லட்சத்தை முஸ்லிம் பெண் வீசி எறிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பாகல்கோட்டை மாவட்டம் பாதாமி தாலுகா கெரூர் பஸ் நிலையத்தில் கடந்த 6-ந் தேதி ஒரு பெண்ணை அங்கிருந்தவர்கள் கேலி செய்ததாக கூறப்படுகிறது. இதை அந்த பெண்ணின் உறவினர்கள் தட்டி கேட்டுள்ளனர். இதனால் இரு தரப்புக்கும் (இந்து-முஸ்லிம்) இடையே மோதல் ஏற்பட்டது. இதில் 4 பேர் கத்தியால் குத்தப்பட்டு காயம் அடைந்தனர். கடைகள் மற்றும் தள்ளுவண்டிகள் தீவைத்து எரிக்கப்பட்டன. இதனால் கெரூர் நகரத்தில் பதற்றம் ஏற்பட்டது. போலீசார் அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு பதற்றத்தை தணித்தனர்.
இந்த நிலையில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நேற்று கெரூருக்கு சென்றார். காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவர்கள் 4 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் ரூ.2 லட்சத்தை நிவாரண உதவியாக வழங்கினார். அந்த பணத்தை பெற்ற முஸ்லிம் பெண், தங்களுக்கு பணம் வேண்டாம், நீதி வேண்டும் என்று ஆக்ரோஷமாக கூறினார். அங்கிருந்து சித்தராமையாவின் கார் புறப்பட்டபோது, அந்த பெண் சித்தராமையா கொடுத்த பணத்தை அவரது கார் மீது வீசி எறிந்தார். அந்த பணம் காரின் அருகில் விழுந்தது. இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து அந்த பெண் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில், ‘எங்களுக்கு பணம் வேண்டாம். நீதி தான் வேண்டும். சில விஷமிகள் அமைதியை கெடுக்கிறார்கள். அத்தகையவர்களை சட்டப்படி தண்டிக்க வேண்டும். சமுதாயத்தில் அமைதி நிலவ வேண்டும்’ என்றார்.
இந்த நிகழ்வுக்கு பிறகு சித்தராமையா கூறும்போது, ‘நான் ரூ.2 லட்சத்தை நிவாரணமாக கொடுக்கவில்லை. மனிதநேய அடிப்படையில் அவர்களுக்கு உதவ வேண்டும் என்ற நோக்கத்தில் கொடுத்தேன். தவறு செய்தவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுப்பார்கள்’ என்றார்.