சிறுவாணி அணையில், 50 செ.மீ., உயரத்துக்கு மதகுகளை, கேரள நீர்ப்பாசனத்துறையினர் நேற்று திறந்து, தண்ணீரை வெளியேற்றியதால், தமிழக அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
கோவை மாநகராட்சி மற்றும் வழியோர கிராம மக்களுக்கு குடிநீர் ஆதாரமாக சிறுவாணி அணை திகழ்கிறது. இது கேரள மாநிலத்தின் அடர்ந்த வனப்பகுதிக்குள் அமைந்திருப்பதால், பராமரிக்கும் பொறுப்பு அம்மாநில நீர்ப்பாசனத்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.அணையின் மொத்த உயரம், 50 அடி. சில ஆண்டுகளுக்கு முன், கேரளாவில் இயற்கை சீற்றத்தால் பலத்த சேதம் ஏற்பட்டதால், அணைகளில், 5 அடிக்கு குறைவாக நீர் இருப்பு வைக்க அறிவுறுத்தப்பட்டது. அப்போதிருந்து, ஒவ்வொரு ஆண்டும் சிறுவாணியில் முழு கொள்ளளவு தண்ணீர் தேக்காமல், பருவ மழை காலங்களில் அடிக்கடி திறந்து விடப்படுகிறது. அதேநேரம், அம்மாநிலத்தில் உள்ள அணைகளில் மட்டும் முழு கொள்ளளவு தேக்கப்படுகிறது.
கடந்த சில நாட்களாக, மேற்குத் திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள இடங்களில் பரவலாக மழை காணப்படுகிறது. நேற்று காலை, 8:00 மணி நிலவரப்படி, அணையின் நீர்ப்பிடிப்பு பகுதியில், 145 மி.மீ., மழை பதிவானது; நீர் மட்டம், 40 அடியை கடந்தது. வழக்கமாக, விலங்குகள் தாகம் தீர்க்க, 5 செ.மீ., உயரத்துக்கு மட்டுமே மதகு திறக்கப்பட்டிருக்கும். நேற்று, 50 செ.மீ., உயரத்துக்கு மதகுகளை, நீர்ப்பாசனத்துறையினர் திறந்து, தண்ணீரை வெளியேற்றினர். இது, தமிழக குடிநீர் வடிகால் வாரியத்தினரை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது. இதுதொடர்பாக, அரசின் கவனத்துக்கு அதிகாரிகள் கொண்டு சென்றனர். நடப்பாண்டு முழு கொள்ளளவு தண்ணீர் தேக்க வேண்டுமென, கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு, தமிழக முதல்வர் ஸ்டாலின் ஏற்கனவே கடிதம் எழுதியிருக்கிறார். அதை பொருட்படுத்தாமல், தண்ணீரை திறந்து விட்டுள்ளனர்.